Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

யாழ் குடாநாட்டின் வரட்சியும், உவர் நீரை உள்வாங்கும் யாழ். நிலக்கீழ் நீரமைப்பும்


சிறந்த மேட்டுப் பயிர் செய்கைக்கு எடுத்துக்காட்டாகத் திகழுகின்றது யாழ் குடாநாடு. வளமான நிலங்களும் பயிர் செய்கையாளர்களின் கடும் உழைப்புமே இதற்கான காரணிகள். யாழ்ப்பாணப் பயிர்செய்கையை பார்த்து வியந்த சிலர் அதை தோட்ட வளர்ப்பியல் கலை என்று புகழ்ந்ததைக் கேட்டிருக்கின்றேன்.

ஆண்டில் சுமார் 50 அங்குல மழை வீழச்சி இங்குண்டு. அதில் 87 சதவீத மழை ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் தான் பெய்யும். இந்த நீரே ஆண்டு முழவதற்குமான குடிநீர் தேவைக்கும் பயிற் செய்கைக்கும் பயன் படுகிறது. பெய்யும் மழையின் பெரும் பகுதி இங்குள்ள நூற்றுக்கணக்கான குளங்களில் தேங்குவதாலும், விழும் நீரை கீழே இழுக்கும் மண்ணின் தன்மையாலும், கீழே செல்லும் நீரை அப்படியே சேமிக்கும் நிலத்தின் அடியிலுள்ள நிலக்கீழ்நீரமைப்பு அல்லது நிலத்தடி நீர்த தேக்கங்களாலுமே ஆண்டு முழவதும் நீரைப் பயன்படுத்துதல் சாத்தியப் படுகிறது.

சுமார் 400 சதுரமைல் கொண்ட இச் சமதரையான பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி உயரம் கொண்ட தெல்லிப்பளைப் பகுதியே அதி உயர்ந்த பகுதி. இதனால் இங்குஆறுகளும் இல்லை. அருவிகளும் இல்லை.நிலத்தடி நீர்த் தேக்கங்களில் தேங்கி கிணறுகளில் ஊற்றாக வரும் நீரை துலாவினதும் பட்டையினதும் உதவியுடன் குடிநீருக்கும் பயிர்ச் செய்கைக்கும் காலம் காலமாகப் பயன்படுத்தி வந்தார்கள். கீழே செல்லும் மழைநீரை விஞ்சும் அளவிற்கு நீர் மேலே இழுபடாத ஒரு சமநிலை கடந்த நூற்றாண்டுவரை நிலவியது.

கடந்த நூற்றாண்டு, நீர் இறைக்கும் பம்பிகள் பயன்பாட்டுக்கு வந்தன. கூடுதல் நீர் மேலே இழுபடத் தொடங்கியது. நீரியல் நிபுணர்கள் நிலத்தடி நீர்த்தேக்கங்களுடன் உவர்நீர் கலக்கும் அபாயம் உண்டென்பதை அறிக்கைகள் மூலம் 50 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்கள். இருந்த குளங்களை ஆழமாக்கியும் தூர்ந்தவற்றை புதுப்பித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இடம்பெயர்வு போன்றவற்றால் நீர்ப் பம்பிகளின் பயன்பாடும் குன்றி இருந்தது. அப்படி இருந்தும் அண்மைய புள்ளி விபரம் ஒன்று குடாநாட்டின் 30 சதவீதமான கிணறுகள் அதாவது 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிணறுகள் உவர்நீர்க் கிணறுகளாக மாறிவிட்டதை வெளிக்கொணர்கிறது. இந்நிலையை நீடிக்கவிட்டால் விளைவு பாரதூரமானதாக மாறும். இதைத் தவிர்க்க உடன் நடவடிக்கை தேவை. இது யாழ்க் குடாநாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனை. இந்நிலையை தவிர்க்க எடுக்கக்கூடிய சாத்தியமான நடவடிக்கைகள் பற்றிப் பார்ப்பதற்கு முன் நாம்குடாநாட்டிற்கு தேவையான நீரை அளிக்கக்கூடிய வளங்களின் சாத்தியம் பற்றி அறிய வேண்டும்.

குடாநாட்டினுள் இரு ஏரிகள் உள்ளன. ஒன்றுவடமராட்சி ஏரி 30 சதுரமைல் பரப்புடையது. மற்றையது உப்பாற்று ஏரி 10 சதுரமைல் கொண்டது. இவை இரண்டும் கடலுடன் இணைகின்றன. வடமராட்சி ஏரி தொண்டமனாற்றிலும், உப்பாற்று ஏரி அரியாலையிலும் இணைகின்றன. கடலுடன் இணைவதால் இவை உவர் நீர் ஏரிகள் என்பது தெளிவு. கவனத்திற்கு எடுக்க வேண்டிய இன்னொருஏரியும் உள்ளது. அது குடாநாட்டை தெற்கிலுள்ள பெரு நிலப் பரப்பிலிருந்து பிரிக்கும் ஆனையிறவு ஏரி. இது 30 சதுரமைல் பரப்பளவு கொண்டது. கிழக்கில் சுண்டிக்குளம் என்னும் இடத்தில் கடலுடன் கலக்கிறது. மேற்கில் யாழ்பாணம் கடல் ஏரியுடன் சங்கமமாகிக் கொண்டிருந்தது.

யாழ் கண்டி வீதியையே அணைபோல் பாவித்து ஆனையிறவு ஏரியை முற்றாக யாழ்ப்பாணம் ஏரியிலிருந்து பிரித்துவிட்டார்கள். கிழக்கில் அதன் கடலுடனான தொடர்பை நீக்க அதாவது சுண்டிக்குளத்தில், 7,000 அடி நீளமான அணை தேவை. இதில் ஏரியில் உள்ள மேலதிக நீர் கடலுட் பாய ஏதுவாக 4,700 அடி வடிகால் அணையாகவும் படுகைப் பாலமாகவும் (spillway cum causeway) அமைய வேண்டும்.

சுண்டிக்குளம் அணையும் பூர்த்தி அடைந்தால் ஆனையிறவு ஏரிக்குள் கடல் நீர் உட்புகுதல் நிறுத்தப்படும். கிளிநொச்சிப் பெரு நிலப்பரப்பான 360 சதுரமைல்களிலிருந்து, கனகராயன் ஆறு, நெத்தலி ஆறு, பிரமேந்தி ஆறு, தேராவில் ஆறு ஆகியவற்றின் ஊடாக ஒவ்வொரு ஆண்டும் சென்றடையும் 90 ஆயிரம்ஏக்கர் அடி நன்நீர் (ஒரு ஏக்கர் அடி என்பது 1 ஏக்கர் நிலத்தில் ஒரு அடி உயரத்திற்கு நிற்கும் நீர்) ஆனையிறவு ஏரிக்குள்ளேயே தேங்கும். மேலதிக நீர் வடிகால் அணையால் வெளியேறும். முன்கூறப்பட்ட வடமராட்சி ஏரி உப்பாற்று ஏரி ஆகிய இரண்டுக்கும் முறையே தொண்டமனாற்றிலும் அரியாலையிலும் அணையிட்டால் அவையும் கடல் நீரை உள்விடாது தடுத்து மேலதிக நீர்தான் வெளியே அனுப்பப்படும்.

அடுத்து ஆனையிவு ஏரியையும் வடமராச்சி ஏரியையும் இணைக்க வேண்டும். இதற்கு இரண்டரை மைல் நீளத்தில் 40 அடி அகலத்தில் முள்ளியான் கால்வாய் என்ற பெயரில்கால்வாய் வெட்டும் பணி தொடங்கி பல காலம்ஆகியும் பூர்தியாகவில்லை. அது பூர்த்தி செய்யப்பட வேண்டும். அத்துடன் உப்பாற்று ஏரியின் அரியாலை அணையும் பூர்த்தியாகி அதுவும்வடமராச்சி ஏரியுடன் இணைக்கப் பட்டால் கடலுடன் தொடுபடாத மொத்தம் 70 சதுரமைல் ஏரி எம் கைக்கு வந்துவிடும். இந்த 70 சதுரமைல் ஏரிகளுள் ஆண்டுக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து உட்செல்லும் 90 ஆயிரம் ஏக்கர்அடி நன்நீர் பாய்வதன் விளைவாக மூன்று ஏரிகளுமே காலப்போக்கில் நன்நீர் ஏரிகளாகி விடும். அது எவ்வளவு காலத்தில் சாத்தியப்படும் என்பது சரியாகத் தெரியவில்லை.

பணிகள் முடிந்ததும் உவர்நீரை பாரிய நீர்ப்பம்பிகள் மூலம் வெளியேற்றி வெற்றிடமாகக் கிடக்கும் ஏரிகளின் தரையை உழுது வைத்தால் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் வரும் அதிக நீர் வடிகால் அணைகளுக்கு மேலாகப் பாய்ந்து, படிந்திருக்கும் உப்பைக் கரைத்து வெளியே அனுப்பி நன்நீராக மாற்றும் பணியைத் துரிதப் படுத்தும். இதனுடன் ஏரிகள் வற்றிய நிலையில் இருக்கும்போது கடல் நீர் உட்புகும் இடங்களை அடையாளம் கண்டு தடுக்கக் கூடியவற்றைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கலாம். சில இடங்களை ஆழமாக்கி ஏரிகளின் கொள்திறனையும் கூட்டலாம். இது முறையான ஆய்வு மேற்கொண்டு பாதகமான விளைவுகள் ஏற்படாத இடங்களில் மட்டும் தான் சாத்தியப்படும். யாழ் குடாநாட்டுக்கு 70 சதுரமைல் பரப்பளவு கொண்ட நன்நீர் ஏரிகளா? அப்படி ஒரு இனிய செய்தி வரத்தான் போகிறது. எப்போ என்பதுதான் இன்றய அவா.

இது இன்றைய நேற்றைய அவா அல்ல. 350 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பித்தான் Hendrik van Rheede முன்மொழிந்திருந்தார். ஒல்லாந்தர் சென்ற பின் 1879 ல் வடமகாண அரசாங்க அதிபராக இருந்த Twyneham அதற்கு உயிர்கொடுத்து ஒரு நடைமுறைத் திட்டம் வகுத்தார். 1920 ல் வடமராச்சி ஏரியின் ஓருபகுதியை நன்நிராக்கும் முயற்சியில் வெற்றி கண்டு நான்கு ஆண்டுகள் அதன் பயனையும் அனுபவித்தார்கள். 1954 ல் நீர்பாசனப் பொறியிலாளர் ஒருவர் அவர் பெயரில் அழைக்கப்படும் புகழ்பெற்ற ஆறுமுகம் திட்டம் என்று ஒன்றை வகுத்தார். அச்சீரிய திட்டம் முற்றாக பூர்த்தி செய்யப்படா விட்டாலும் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப் படுவதும் பின் கை விடுவதுமாக 60 ஆண்டுகள் கழிந்து விட்டன. முக்கால் பங்குக்கு மேலாக வெட்டப் பட்டதும், ஆனையிறவு வடமராச்சி ஆகிய ஏரிகளை இணைக்கப் போவதுமான முள்ளியான் கால்வாய் இன்னும் முற்றுப்பெறாத காரணத்தால் பெரு நிலப்பரப்பிலிருந்து பாயும் பல ஆயிரம் ஏக்கரடி நீரில் ஒரு துளி என்றாலும் வடமராச்சி உப்பாறு ஆகிய ஏரிகளைச் சென்றடையவில்லை.

  • இந்தத் திட்டம் பூரண வெற்றி அடையும்போது பக்க விளைவுகள் சில ஏற்படத்தான் செய்யும். முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது மீனவர் பாதிப்பு.
  • உவர் நீரிலிருந்து நன்நீராக மாற்றமடையும் காலகட்டத்தில் சூழல் மாற்றம் காரணமாக சில மீனினங்கள் நண்டு, இறால் ஆகியவை அழியும். தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு அங்கு மீன்பிடித் கொழிலில் ஈடுபடும் 2000 வரையான தொழிலாளர் பாதிக்கப்படுவர்.
  • சுண்டிக்குளத்தில் பறவைகளுக்கான சரணாலயம் ஒன்றுள்ளது. அங்கு வெளிநாடுகளிலிருந்து இடம்பெயரும் பறவைகள் வந்து செல்வதுண்டு. சூழல் மாற்றம் நிச்சயம் அவற்றின் வதிவிடங்களைப் பாதிக்கும்.

இதைக் காரணமாக வைத்து வெளிநாடுகள் இந்த நன்நீர் ஏரிகள் திட்டத்திற்கு நிதி தர மறுக்கின்றன. இம் மறுப்பிற்கு, குடாநாட்டின் வாழ்வாதாரப் பிரச்சனையான உவர்நீர்ப் பிரச்சனையைபின் தள்ளிவிட்டு பவைகளுக்காக அக்கறை காட்டுவதுபோல் நம்மவர் சிலர் வெளியிடும் அறிக்கைகள் தான் காரணம்.

இத்திட்டம் முற்றுப் பெற்று நன்நீர் ஏரிகள் வந்தால்நாம் மேலே இழுக்கும் நீரை திருப்பி ஊட்டத் தேவையான நீர் சுண்ணாகம் (வலிகாமம்) வடமராச்சி, தென்மராச்சி, ஊர்காவற்துறை ஆகிய குடாநாட்டின் நான்கு பிரதான நிலக்கீழ்நீரமைப்புகளுக்கும் கிடைக்கும். வாழ்வாதாரத்தையே பாதிக்கக் கூடிய உவர்நீர் உட்புகதல் நின்றுவிடும். இதுதானே நம் கவலையாக இருநத்து. குடாநாடு பாதுகாக்கப் படுகிறது. வேறு பயன்களும் உள்ளன. கிணறுகளின் ஊற்று அதிகரிக்கும். மழையை நம்பி மானாவாரியாக இன்றுவரை செய்யப்படும் 20,000 ஏக்கர் நெல்வயல்களை கிணற்று நீரைப் பயன்படுத்தி நீர்பாசன வயல்களாக மாற்றி விளைச்சலை மும்மடங்காக்கலாம். ஏரிகளை அண்டிய பகுதிகளில் உவர் காரணமாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள 10,000 ஏக்கர் வரையான நிலங்களை நெற் சாகுபடிக்குக் கீழ் கொண்டு வரலாம்.

இன்னொரு விடயம் நன்நீர் இறால் வளர்ப்புமிகவும் வருவாய் கூடிய துறை. இந்த நன்நீர்ஏரிகளில் முறையாகத் திட்டமிட்டு இடமொதிக்கி இத்திட்டத்தால் பாதிக்கப் பட்ட மீனவ குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்து கடன் வசதியும் ஏற்படுத்தினால் அவர்கள் வருவாய் ஏரிகள் உவர்நீராக இருந்த போது கிடைத்ததை விட சில மடங்குகளால் அதிகரிக்கும். நாட்டுக்கு அந்நியச் செலவாணியும் வந்தடையும்.

இத்திட்டத்தை பூர்த்தி செய்யத் தேவையான தொண்டமனாற்று அணை 10 கோடி ரூபா செலவில்கட்டப் பட்டு விட்டது. அரியாலை அணையும் முடியும் நிலையில் உள்ளது. வீதியும் அணையுமான கண்டி வீதி. அதுவும் முடிந்து விட்டது. முக்கால் பங்குக்கு மேல் முடிந்து தூர்ந்த நிலையில் உள்ள முள்ளியான் கால்வாயும் சுண்டிக்குளம் நீர்வடிகால் படுகைப் பாலப் அணையும்தான் தாமதப்படுகின்றன.

100 கோடி ரூபாவுக்குள் முடிக்கக் கூடிய இத்திட்டத்தை துரிதப்படுத்தாது பின் தள்ளி விட்டு யாழ்ப்பாணக் குடிநீருக்காக ஒரு திட்டம் வகுத்துள்ளார்கள். அத்திட்டத்தின் கீழ் பரந்தனிலிருந்து இரணைமடு நீர்த் தேக்கத்தின் நீரை யாழ் நோக்கி கொண்டு செல்ல 25 மைல்களுக்கு கூடிய நீளத்திற்கு குழாய்கள் போடப்பட உள்ளன. அந்தக்காசே நன்நீர் ஏரித் திட்டத்தை முடிக்கப் போதுமானது. இரணைமடுக் குளத்தின் நீரைப் பயன்படுத்துவதால் கிளிநொச்சி மக்களின் சிறுபோக நெற்செய்கை பாதிக்கப்படும் என்ற ஆட்சேபனை காரணமாக இத்திட்டம் தள்ளிப் போடப்பட்டு, இரணைமடுவின் அணையை இரண்டு அடியால் உயர்த்துவதற்கு ஒரு திட்டமும், மகாவலி கங்கையின் ஒரு பிரிவான மொறஹாகந்தைத் திட்டத்தை துரிதப்படுத்தி மகாவலி கங்கை நீரின்ஒரு பகுதியை 2020 ம் ஆண்டளவில் இரணைமடுவிற்கு கொடுக்கவும் திட்மிட்டுள்ளார்கள்.

இரணைமடு நீர்த் தேக்கத்திற்கு வடமத்திய மாகாணத்திலிருந்து நீர் கொண்டு வரும் செயலானது, ஒரு மகாணத்திலிருந்து மற்றைய மாகாணத்திற்கு நீர் போவது. ஓரு மகாணத்திலிருந்து மற்றைய மாகாணத்திற்கு நீர் அனுப்புவதானால் அந்நீரின் கட்டுப்பாடு நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே நடைபெறும். இதனால் அந்த நீர்விநியோக நடவடிக்கை அனைத்தும் மாகாண சபையின் கையிலிருந்து மத்திய அரசின் கைக்கு மாறிவிடும்.
1200 கோடி ரூபா செலவில் நடக்கவிருக்கும் யாழ் குடிநீர் திட்டத்தை நாம் எளிதில் புறக்கணிக்கவும்முடியாது. அதன் கீழ் பாரிய நீர் கொள்கலன்கள் நீர் சுத்திகரிப்பு வேலைகள் என்று பல நல்ல அம்சங்கள் அடங்கி உள்ளன. 100 கோடி ரூபாவுக்குள் முடிக்கக்கூடிய யாழ்பாணத்திற்கு ஒர் ஆறு என்ற பெயரில் நடைபெறும் நன்நீர் ஏரித் திட்டத்தை துரிதப்படுத்த குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உள்ளது.

(இக்கட்டுரை பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் ஒருபேப்பர் பத்திரிகையில் கடந்த வாரம் வெளிவந்திருந்தது.  தேவை கருதி இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன்)

நன்றி - ஒருபேப்பர்

Read more...

விடைபெறும் 2009, மலரும் 2010 - புத்தாண்டு வாழ்த்துக்கள்

வணக்கம்!
விடைபெறும் 2009ம் ஆண்டே !
ஒவ்வொருவரினது மனதிலும் ஏதோ கொஞ்ச சந்தோஷங்களையும் கணக்குகளற்ற வலிகளையும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறாய். வலிகளின் மூலம் எம் வலிமையை உணர்த்தி விட்டே சென்றிருக்கிறாய்....

மலரும் 2010ம் ஆண்டே !
நீ எங்களுக்கு எல்லாவகையிலும் இனிதாக அமைவாய் என்பதில் நம்பிக்கையில்லை.. எனினும் மலரப் போகும் 2010ம் ஆண்டு எங்களுக்கு எல்லா வகையிலும் இனிதாக அமையட்டும். அதுபோலவே எங்கள் தேசத்தில் அல்லறும் எமது உறவுகளின் வாழ்வில் இன்பம் மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் பிறக்கும் புதுவருடம் சுபீட்சமான ஆண்டாக மலரட்டும்.

வலையுலக நண்பர்கள், நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

நன்றிகளுடன்

மாயா

Read more...

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


வணக்கம் நண்பர்களே,
இலங்கையில் பதிவர்சந்திப்பை இரண்டாவது தடவையாகவும் நடாத்தவேண்டும் என்கின்ற எம் அனைவரதும் ஆசை நிறைவேறப்போகின்றது.

இடம் : கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை
  • புதிய பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 : பயனுறப் பதிவெழுதல்
  • கலந்துரையாடல் 2 : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
  • சிற்றுண்டியும் சில பாடல்களும்
  • கலந்துரையாடல் 3 : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமம்
  • கலந்துரையாடல் 4 : பெண்களும் பதிவுலகமும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
  • உங்களுக்குள் உரையாடுங்கள்
பதிவர்கள் தங்கள் வருகையை இங்கே சென்று பதிலிடுவதன் மூலமோ, தெரிந்தால் அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி இதோ !

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

மேலதிக தகவல்களை இங்குசென்று பெற்றுக்கொள்ளலாம்... =>




Read more...

தமிழக தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே!

முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.

பாசத்திற்குரியவர்களே!

நீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்துவிட்டீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகக் கூடி - ஒருமித்த குரலில் - பலம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் - தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.

முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமன்றி, காத்திரமான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப-கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

கட்சிகளின் வரம்புகளைத் துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களைக் கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் "இனத்தின் உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்" என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். "தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது" என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தைப் பூசி விட்டீர்கள்.

மாண்புமிகு முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக - தமிழினத்தின் நிபந்தனையற்ற காவலனாக - அவரது உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சிக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டீர்கள். தமிழர்களுக்கு எதிரான போரை நிறுதவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய்க் குடியமரவும் - உருப்படியான காரியங்களைச் செய்யுமாறும், சிறிலங்கா அரசுக்கான அனைத்து இராணுவம்- சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியைக் கொடுத்திருக்கின்றீர்கள்.

தமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும் -

- தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியைக் காட்டியிருக்கின்றது!

- "தமிழகம் எமக்காகப் பொங்கி எழாதா?.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா?.." என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.

- "தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை!" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு சினத்தையும் அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது.

- எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை - தமது சொந்த நலன்களுக்காக - கைகட்டிப் பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அதிர்ச்சியளித்திருக்கின்றது.

வரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம். நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கின்றான் தமிழன்.

எமது அன்பான தமிழகத்து உறவுகளே!

தமிழீழ மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் எல்லையற்ற பாசத்தையும், அக்கறையையும், அவர்களுக்காக நீங்கள் சந்தித்த இடர்களையும் நாம் அறிவோம். ஆட்சியை இழக்கும் சூழல் வந்த போது, சொந்தக் குழந்தைகளுக்காகத் துன்பங்களைத் தாங்கும் ஒரு தந்தையாக அதைப் பொறுத்துக்கொண்ட கலைஞர் ஐயாவையும், சிறையில் வாடும் துயரம் நிகழ்ந்த போது, சொந்தச் சகோதரர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட தலைவர்களையும், இன்னும் எத்தனையோ வழிகளில் எமது சுமைகளைச் சுமந்த அனைவரையும் நாம் என்றும் மறவோம். எங்கள் நெஞ்சங்களின் மிகச்சிறந்த இடமொன்றில், நன்றியுணர்வுடன் உங்களை நாம் அமர்த்தியிருக்கின்றோம்.

தமிழினத்தினது வரலாற்றின் மிகவும் உச்சமான ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இன்று இருக்கின்றோம். சரியான திசையில் தன்னை நகர்த்திச் செல்வதற்காக - காலத்திற்குக் காலம் - ஒப்பற்ற மனிதர்களை வரலாறு பிறப்பிக்கின்றது. அவர்களைத் தான் நாம் வரலாற்று மனிதர்கள் என்கின்றோம். அத்தகைய ஒரு மகோன்னதப் பிறப்பை கலைஞர் ஐயா அவர்களுக்குக் கொடுத்த சரித்திரம், இப்போது அவரை மிகச்சரியான இடத்தில் அமர்த்தியிருக்கின்றது.

தென்னாசியாவையே அசைக்கும் வல்லமையை அவருக்குக் கொடுத்திருக்கின்றது. அவரது அறிவு ஞானமும், அரசியற் செல்வாக்கும் தமிழர்களுக்கென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்கி, தமிழீழத்தில் துன்பத்தில் உழலும் எம் உறவுகளுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தவை. தமிழீழ மக்களின் சுதந்தரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, அவருக்குப் பலம் சேர்த்து,

அவரை உற்சாகப்படுத்தி, தமிழினத்தைத் தாங்கும் தூண்களக நீங்கள் எல்லோரும் விளங்க வேண்டும் என்று நாம் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலும், தமிழினத்தின் நிரந்தரக் காவலனாக கலைஞர் ஐயா என்றும் இருக்கின்றார் என்பதை, தமிழினத்தின் பகைவர்களுக்கும், இந்த உலகிற்கு அவர் உணர்த்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

அன்பானவர்களே!

இப்போது - தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நிம்மதியைக் கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறி, சுதந்திரமக வாழ ஆவன செய்ய வேண்டும்.

"சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாதெனின், தமிழர்கள் பிரிந்து போவதே சரி" என்பதே கலைஞர் ஐயா அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடும், தமிழகத் தலைவர்களாகிய உங்களில் பலரது வெளிப்படையான நிலைப்பாடுமாகும். உங்களது அந்த நிலைப்பாட்டுக்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்களின் துன்பங்களுக்கு "தமிழீழத் தனியரசு" தான் சரியான ஒரே தீர்வு என்ற ஒரு தீர்மானத்தை தமிழக மக்களவையிலே நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவில் இருக்கும் தடையை நீக்கி, ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வழி பிறக்கச் செய்ய வேண்டுமென்றும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஒர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம்: தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் நான் அறிவோம்.

ஒரே இரவில் அதிசயங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்: நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.

நன்றி கலந்த மரியாதையுடன்,
இலங்கை தமிழ் சங்கம் - ஐக்கிய அமெரிக்கா
மின்னஞ்சல் : president@sangam.org

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம் இணையம்

Read more...

மெட்ரோ நியூஸ் பத்திரிகையின் பார்வையில் இலங்கைவலைப்பதிவர் திரட்டி

கடந்த வியாழக்கிழமை 22 2008 அன்று இலங்கையிலிருந்து வெளிவரும் மெட்ரோநியூஸ் பத்திரிகையில் இலங்கைவலைப்பதிவர் திரட்டி பற்றிய ஆக்கம் ஒன்று வெளிவந்துள்ளது இச்செய்தியை இலங்கைவலைப்பதிவர்கள் , உலகெங்கும் பரந்திருக்கும் தாயக நெஞ்சங்கள் மற்றும் இந்தியவலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்
இலங்கைப்பதிவர்களுக்கென தனிப்பட்ட திரட்டியொன்றை உருவாக்கும் எண்ணம் உருவாகி முதலில் இலவச சேவை வழங்குனர்களிடமிருந்து சேவையைப்பெற்று அதற்கான ஆரம்பகட்டவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலே பத்திரிகையின் கண்களில் இத்திரட்டி பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியைத்தருகிறது
இதன்முலம் இலங்கைப்பதிவர்களாகிய எங்களுக்கு தனியானதும் சிறந்ததுமான இலங்கைவலைப்பதிவர்களுக்கான திரட்டியை உருவாக்கிமுடிக்கும் எண்ணம் இன்னும் வலுப்பெற ஆரம்பித்துள்ளது
அந்தவகையில் திரட்டி ஆரம்பித்த நாளில் இருந்து தொடங்கி இன்றுவரை பேருதவி புரிந்துவரும் அனைவரையும் நன்றியோடு நினைப்பில் வைத்திருக்கின்றேன். ஒருவரா இருவரா விரல் விட்டுச் சொல்ல..?

எல்லா நண்பர்களின் உற்சாகப்படுத்தலுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தேரிவிக்கிறேன்

இன்னும் கடக்கவேண்டியது நீண்ட தூரம் அல்லவா:-)
நன்றி

பத்திரிகையில் கண்டெடுத்துத்தந்த நிர்ஷனுக்கு நன்றிகள்

Read more...

இலங்கைப்பத்திரிகையில் மலர்ந்தது "பலிபீடம்" வலைப்பூ

இலங்கை வலைப்பதிவர் வரலாற்றில் வலைப்பதிவுகள் பத்திரிகைகளில் வெளிவருவது முக்கியமானதொரு மைல்கல்லாகும் இவ்வாறான ஆக்கங்களை எழுதுவதன் மூலம் தாயகத்திலிருந்து மென்மேலும் வலைப்பூக்கள் , மேலும் பல பதிவர்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது. அந்தவகையில் இன்று எனது வலைப்பூ தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்துள்ளது இந்த சந்தோஷத்தை அனைத்து இணைய நண்பர்கள் மற்றும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்கிறேன்।

தினக்குரலுக்கும் தாசன் அண்ணாவுக்கும் நன்றிகள்

Read more...

காரைநகரீந்த மைந்தன் தி.மகேஸ்வரனுக்கு அஞ்சலிகள்

காரை நகரீந்த கலங்கரை விளக்கே
நல்லார் மனதில் கைத்தல நித்திலமே
ஆரைமேற் பூசாய் ஆரோகணித்த அரசியல் வாதியே
எல்லாப்புகழுக்கும் ஏற்றவா எங்குற்றாய்

இந்தாண்டு பாராளமன்றத்தில் நீசெய் இடியுரை
எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுப்பாய் செய்தமை
மின்னல் கீற்றாய் மாற்றாரை முட்டியடித்ததோ காண்
சொல்லாமல் கொள்ளாமல் டக்கெனச் சென்றாயோ

உள்ளமது திறந்து பேசி ஊரோடுறவாடி
கள்ளமில்லா அன்பால் கனிவாக சுகம் கேட்பீரையா
எள்ளவும் எண்ணவில்லை உன்சரண நாளிதனை
மெள்ளவுனை அழைத்தானோ பொன்னம்பலவாணேசன்

இந்து மதத்தின் இணையில்லாக்காவலனே
நந்தம் தமிழினத்தின் துயர் களைந்த நேயனே
சந்ததம் சிவத்தமிழை சிந்திக்கும் சாகரனே
உந்தனைப்போலினியெவர்ரெமக்கு உதவுவார்

அறநெறி வாழவைத்தாய் அன்பு நெறி ஓங்க வைத்தாய்
திறநெறி சூழவைத்தாய் தெர் புதிதாய் ஓடவிட்டாய்
மறநெறி மாள வைத்தாய் மன் நெறியை ஏந்த வைத்தாய்
குறள் நெறியைக்கைக்கோண்டாய் குற்றமென்ன செய்தாய் சூடுற

ஈழத்து சிதம்பரனை இறுதிநாள்வரை நினைத்து

மாழாக்க மில்லா மண்ணக வாழ்வு வாழ்ந்த மகேஸ்வரா
வையத்துள் உன்வாழ்வு வரலாறாய் ஆனதால்
தெய்வத்துள் நீயிருப்பாய் தினம் தினமுன் பேரிருக்கும்


ஆக்கம்
சிவயோகச்செல்வர்
சாம்பசிவம் சிவாச்சாரியார்

Read more...

இலங்கைத்தமிழ் வீரர் முரளிக்கு வாழ்த்துக்கள்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 709வது விக்கெட்டை வீழ்த்தி, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ண் இனது 708 என்ற இலக்கை எட்டியதன் மூலம் புதிய தோர் உலக சாதனையை இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் தனது சொந்த ஊரான கண்டியில் நேற்று முறியடித்தார் இங்கிலாந்துக்கும், இலங்கைக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தச்சாதனையைப்படைத்தார்.
இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட்டை வீழ்த்தியதன் மூலம் 709 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இந்தச்சாதனையைப்படைத்தார். முரளியின் உலக சாதனையைத் தொடர்ந்து கண்டி மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடியது. இலங்கை வீரர்கள், முரளியை கட்டிப் பிடித்தும், தட்டிக் கொடுத்தும் வாழ்த்தினர். ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். இலங்கை முழுவதும் முரளியின் உலக சாதனையை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினர். சாதனைக்கு பிறகு கருத்துவெளியிட்டுள்ள முரளீதரன் "சொந்த மண்ணில் தனது பெற்றோர்கள், மனைவி மற்றும் உறவினர்கள், கல்லூரி நண்பர்கள்
சூழ்ந்திருக்க இந்தச் சாதனையை படைத்ததிருப்பதால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். "

முரளியின் சாதனைப் பட்டியல்
* டெஸ்ட் போட்டிகள் - 116 விக்கெட்டுகள் - 709

* 10 விக்கெட் வீழ்ச்சி - 20 முறை
* 5 விக்கெட் வீழ்ச்சி - 61 முறை.

முத்தையா முரளிதரனின் உலக்ச் சாதனையைப் பாராட்டி அரசு அவரது உருவம் பதித்த வட்டவடிவ தபால் தலை ஒன்றினை வெளியிட்டு கௌரவித்துள்ளது. இலங்கை அரசின் அதிபர், பிரதமர் ,எதிர்க்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராட்டுக்களை முரளீதரனுக்கு தெரிவித்துள்ளனர்.


இது பற்றி கருத்துத்தெரிவித்த ஷேன் வார்ண் " தனது சாதனையை முறியடித்துள்ள முரளீதரன் ஆயிரம் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய திறமை வாய்ந்தவர்" என்று ஷேன் வார்ண் தெரிவித்துள்ளார். "அவ்வாறு அவர் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அந்தச் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்."

முரளிதரன் சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ராமமூர்த்தியின் மகள் மதி மலரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். மதி மலர் முரளியின் சாதனையை நேரில் பார்த்து மகிழ்ந்தார்.

Read more...

காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80 வருடங்கள்

மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80வருடங்கள் பூர்த்தியாகியது (29.11.1927 – 29.11.2007) அந்நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் அவர் எமது யாழ் பரியோவான் கல்லூரிக்கும் [Jaffna St Johns College ] விஜயம் செய்திருந்தார் அதையொட்டிய நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றன

பட உதவி சின்னக்குட்டி

Read more...

இலங்கை மலையக மக்களின் [ இளைஞர்களின் ] இன்றைய நிலை


முலம் :- வீரகேசரி
நன்றி

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP