மதியம் ஞாயிறு, 6 ஜனவரி 2008

ராமேஸ்வரம் [இலங்கையிலிருந்து பிந்திய விமர்சனம்]

PALIPEDAMராமேஸ்வரம் இலங்கை அகதிகளைப்பற்றி அவர்களது யதார்த்தத்தைச்சொல்லும் அருமையான கதைக்கருவுள்ள படம் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது . அத்துடன் ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் (அக்கறை உள்ளவர்கள போல் காட்டிக்கொள்பவர்களுக்கெல்லாம் ) ஏதொ இலங்கையரைப்பற்றிய திரைப்படம் போல் தான் தெரியும் . தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அண்மையில் தான் இலங்கையில் வெளியானது அதுவும் வசதிகள் குறைந்த திரையரங்கு ஒன்றில் தான் வெளியானது . குப்பைப் படங்களை எல்லாம் ஓடியோடி வாங்கும் இலங்கை மற்றும் புலம் பெயர் சினிமா வர்த்தகர்கள் இதை ஏன் வாங்க மறுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சரி சரி படத்துக்கு வருவோம் . . .

* இயக்கம் : செல்வம் , ஓர் அழகான கதையைச் சொல்லியிருக்கிறார் ஆரம்பத்தில் யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் கனடா பிரான்ஸ் அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் அவர் , கடைசியில 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று முடிக்கிறாரே ! அங்கேயே இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது
* இசை : தமிழ் ஈழத்தில் அளவெட்டியில் ( நான் பிறந்த ஊர் என்றால் சும்மாவா ) பிறந்து, ஈழத்திலிருந்து பிரான்சுக்கு அகதியாய் சென்று வாழ்ந்த இசையமைப்பாளர் நிரு தமிழக தமிழர்களின் இதயங்களில் மிக விரைவில் இடம்பிடிப்பார்.
* ஒளிப்பதிவு : குருதேவ் - வெற்றிக்கு சபாஷ் அழகாக படம் பிடிக்கப்பட்ட ராமேஸ்வரமும், கடல் மற்றும் கடல் சார்ந்த இடமும் அருமையாக கண்முன்னே விரிகிறது குறிப்பாக அதிலும் குறிப்பாக 'எல்லோரையும் கூட்டிப்போக கப்பல் வருமா' என்கிற பாடல் வரிகளுக்கு காட்சிகள் அழகோ அழகு
* நடிகர்களாக தமிழகத்தின் பிரபல நடிகர் ஜீவா மற்றும் பாவனா இருவரும் நடித்துள்ளனர். ஜீவா ஜீவன் என்ற பாத்திரத்திலும் பாவனா வசந்தி என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் பாவனாவின் அப்பாவாக நடித்திருப்பவர் (மலையாள நடிகர் லால்) மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போஸ்வெங்கட் படத்தில் பாவனாவின் முறைமாமன், ஒருதலையாக பாவனாவை காதலிப்பவர், பொலீஸ் அதிகாரியாக வருகிறார். அது மட்டுமல்லாமல் பல ஈழத் தமிழர்கள் அப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மணிவண்ணன் , இவர் 30 நிமிட காட்சிகளில் இருந்தாலும், ஈழ ஆசிரியர் ஒருவரை கண்ணுக் கொண்டு வந்து மறைந்து போகிறார். இவர் இழப்புக்களைப்பற்றி பேசும் வசனங்கள் முகத்தில் அறைந்தாற்போல் இருக்கின்றன

கதை பெரிதாக ஒன்றுமில்லை கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை இலங்கையிலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வரும் ஜீவன் மற்றும் ஏனையொர் மீது பரிவு காட்டுகிறார் ஊர் பெரிய மனிதர் . பெரிய மனிதரின் மகள் வசந்தி ஜீவன் மீது பரிவு காட்டுகிறார். அவளைத் தவிர்க்கும் ஜீவன், ஒருகட்டத்தில் மனம் மாறி நேசிக்கிறார் .இருவருக்குமான காதல் இறுகுகிறது. எதிர்பார்த்தது போன்றே அவர்கள் காதலுக்கு வசந்தி வீட்டில் வசந்தியின் முறைமாப்பிள்ளையும் காதலுக்கு எதிராக எதிர்ப்பு. காதலியைக் கைப்பிடிக்க வருவேன் என்று சொல்லிவிட்டு ஜீவன் தன் ஊர் மக்களுடன் தாயகம் செல்கிறார்.திரும்பி வந்து காதலியைக் கைப்பிடித்தாரா என்பதுதான் கதை.

இத்திரைப்படத்தில் கவனிக்கப்படவேண்டியவை
* இங்கே கதையைவிட இலங்கைத்தமிழர் விடையத்தைக்கையாண்ட விதம் தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்று ஈழத்தமிழரைக் கொச்சைப்படுத்தாத படமாக இருப்பது மிகவும் கவர்ந்துள்ளது புலம் பெயர் தமிழர்கள் சிறுவயதில் அகதிவாழ்க்கை வாழ்ந்ததை அப்படியே மனதில் திரும்பவும் புரட்டிப்போட்டிருக்கும்
* வழமையாக திரைப்படங்களில் கதாபத்திரம் ஈழத்தவராக இருந்தாPALIPEDAMல் அவர் பேசும் மொழி என்று ஈழத்து பெருமாலும் யாழ்ப்பாண மொழியைப் பேசுவதாக நினைத்து கொலை செய்வார்கள். தென்னாலி படத்தில் கமலாகாசன் கொலை செய்கிறார். (தெனாலியை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது) ஆனால் இப்படத்தில் நாயகன் 90 வீதமாகவேனும் ஒழுங்கான இலங்கைத்தமிழில் நடிக்கிறார்கள் . இதற்கு பாராட்டவேண்டும். பேசிக் கொலை செய்வதை விட பேசாமல் இருக்கலாம். நடிகர் மணிவண்ணன் ஒரளவு ஈழத்து மொழியில் பேச முயற்சித்து இருக்கிறார். கமலை விட நன்றாகப் பேசியிருக்கிறார். படத்தில் சில பாத்திரங்கள் யாழ்ப்பாண மொழியில் நன்றாகப் பேசி இருக்கிறார்கள்.


நெஞ்சைத் தொடும் வசனங்கள் ! அதே சமயம் எளிமையாகவும்...! உதாரணத்திற்கு சில

* ஊர் பெரியவர் சொல்லும் "உங்க ஊரையும் எங்க ஊரையும் கடல் பிரிச்சிருக்கலாம். ஆனா கீழே பூமி ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு" என்ற வசனம்
* அகதிகள் முகாம், என்பதை ஜீவா 'புலம்பெயர்ந்தோர் முகாம்' என்று மாற்றுவதும், அதைத் தொடர்ந்து 'பெயரை மாற்றினால் எலலாம் மாறிவிடுமா ?' என்று ஈழப்பெண் கேட்கும் போது, 'எல்லாமும் மாறனும், முதலில் இதை மாற்றுகிறேன், எனது பங்களிப்பு என்று இதுவாக இருக்கட்டும்' என்ற வசனம்
* ஊர் பெரியவர் நிவாரணப்பொருட்களைக்கொண்டு வரும்போது "முகம் தெரியாத ஆட்கள் கொடுப்பதை வாங்கும்போது பிச்சைனு எடுக்கும் உணர்வு வந்துவிடும் " என்று ஜீவா கூறுவதும்
* இவ்வளவு பெரிய தழும்பா? என்று கேட்கும் அதிகாரியிடம், இதுதான் எங்க ஊர்ல சின்ன தழும்பு என்று அலட்சியம் காட்டி மணிவண்ணன் கூறுவதும்
* அகதித் தமிழன் ஒருவர் செயற்கைக் காலுடன் இருப்பார் . அது தெரியாத போலீஸ்காரன் அவரை உதைப்பார். செயற்கைக் கால் பறந்து போகும் உடனே அருகிலிருக்கும் பெரியவர் கீழே விழுந்தவரிடம் மன்னிப்புக்கேட்கு முன் அவர்(அகதித் தமிழன்) பேசும் வசனத்தையும் உணர்ச்சியையும் இதுவரை எந்த ஈழத்துப் படமும் இவ்வளவு தத்ரூபமாகப் பேசிவிடல்லை.
இப்படியான இடங்களில் இயக்குனருக்கும் வசனகர்த்தாவிற்கும் வாழ்த்துச்சொல்லலாம் !

சரி இனி பாடல்களுக்கு வருவோம் ஈழத்தமிழ் உறவுகளின் உணர்வுகளை, வலிகளை நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி அனைவரும் எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள். அவர்களை என்றுமே பாராட்டலாம்.

1]
நேற்றிருந்தோம் எங்கள் வீட்டினிலே

நிலவெறியும் எங்கள் காட்டினிலே
யார் தந்த சாபம் இது?
யார் செய்த பாவம் இது?

கண்ணீர்த் துளியும் வலியும் சேர்ந்த கூடாய்க் கிடக்கின்றோம்.
உயிரை அங்கே வைத்தோம்
அதனால் உயிரைச் சுமக்கின்றோம்
எத்தனை உறவுகள் தொலைத்தோம்
எதற்கு நாங்கள் பிழைத்தோம்!
என்று தொடர்கிறது

2] எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..?
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..?
அட தூரம் கண்ணில் வருமா ஈரம் கண்ணில் வருமா?
யாரும் இல்லா ஊருக்குள்ள தெய்வம் தேரில் வருமா?

எங்கள் பூமி தீயின் வசமே
எம்மைச் சுற்றி அலைகள் எழுமே
உண்மைத் தோளில் மாலை விழுமே
நம்பிக்கை நாளை உரமாகும்!

நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்
ஊதிடும் நாள் வருமா?
கும்பிடு சந்தையில் புகையிலை
வாங்கிட நாள் வருமா?
கல கலனென்னு பாடசாலைக்குள்ள
படிக்கிற நாள் வருமா?

என்று முதலில் சிறுமியின் குரல் ஒலிக்க கண்களில் நீர் வழிகிறது. இந்தப்பாடலைக்கேட்கும்போது பழைய அகதி வாழ்க்கைகள் நினைவுக்கு வரகின்றன . 1995 இல் இதே போன்று நான் கூட அகதியாய் சாவகச்சேரியில் வாழ்ந்தவன். அங்கே வானமே கூரையாக சிறுவயதில் பட்ட கஸ்டங்கள், வேதனைகள் இப்பவும் நெஞ்சில் பதிந்து இருக்கின்றது ( பாடியோர் மாணிக்கவிநாயகம், கரிச்சரன், சிரேயா, ரேஷ்மி)

3] அலைகளின் ஓசைகள் தானடடி
அகதியின் தாய்மொழ ஆனதே
எனக்கென யாரோ..?
என்னை நான் தினம் கேட்கிறேன்

அலைகளின் ஓசைகள் தானடா
அகதியாய் ஏங்குவனேடா..
உனக்கென நானே ஒற்றைப்
பெண் என வாழ்கிறேன்

தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெறும்வரை காத்திருப்பேன்
உன்னைத் தொலைத்து விட்டாலே
இங்கோர் அகதியாய் நானிருப்பேன்! என்று தொடர்கிறது

(பாடியோர் கரிச்சரனும் கல்யாணியும் )

போர் நடந்தாலும் உங்கள் ஊரில் யாரும் காதலிக்கவில்லையா ? , குழந்தை பிறக்கவில்லையா?, வாழ்க்கை தொடரவில்லையா? என்னும் கேள்விகளின் பின் மலரும் காதல் பாடலாக இது வருகிறது

மொத்தத்தில் :(
* அகதிகளின் வாழ்க்கை பின்னணியில் சொல்லப்பட்டதாலோ என்னவோ, காதல் கதை என்றாலும் படம் முழுக்க ஒரு சோகம் இழையோடுவதாக உணர்வதை தவிர்க்க முடியவில்லை.இருப்பினும் காதல் கதைக்கு இலங்கை அகதிகளின் வாழக்கை சோகங்களை வெளிப்படுத்த முயற்சித்த இயக்குனரை பாராட்டலாம் !
* இந்திய சென்சார் போட் அனுமதித்திருக்கும் அளவு மேலும் சிறப்பாக ஈழத்து கதைகளை சொல்ல முடியும் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது. இந்தப்படத்தால் இந்திய சென்சாருக்குள் ஈழத்து கதைகளை சொல்ல முடியாது என்று பொய்க்கருத்துக்களை பரப்பிவந்த பெரிய இயக்குனர்களின் கருத்து உடைபட்டுப் போயிருக்கிறது
* ஈழத்தமிழர்களின் 'நலன்' என்று வாய்கிழிய பேசும் நடிகர்கள், அரசியல்வாதிகள், போல் இன்றி ஜீவா மற்றும் பாவானா மணிவண்ணன் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்தது உண்மையிலேயே சிறப்பான விடயம் .

புலம் பெயர் தமிழர் அப்படத்திற்கு பொருளாதார ரீதியாக எந்தவொரு வெற்றியையும் வழங்கவில்லை என்ற வருத்தம் தயாரிப்பாளர் தரப்பில் இருக்கிறது. எனவே புலம்பெயர் நண்பர்களே படத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பார்ப்பதற்காகவேனும் உங்கள் குடும்பத்தினருடன் திரையரங்குக்கு சென்று பாருங்கள்


நண்பர்களே !
ஈழத்தவர் குறித்து பேசும் திரைப்படத்துக்கு ஆதரவழிப்பதால் இது போன்ற பல படங்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால். இது போன்ற முயற்சிகள் தொடரும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

PALIPEDAM

மொத்தத்தில் இராமோஸ்வரம் படமல்ல ... உணர்வால் கலந்து ஒன்றிணைந்த தமிழர்களின் பல உணர்வுகளை மீட்டும் ஒரு காவியம் அத்துடன் இராமேஸ்வரம் இலங்கை அகதிகள் குறித்து இதுவரை வெளிவந்த எல்லாப் படங்களையும் விட சிறந்தவொரு படைப்பு என்பதில் ஐயமில்லை

இணையங்களினூடு பெற்ற தகவல்களுடன் ஆக்கத்தை எழுதி உங்களிடமிருந்த விடைபெறுகிறேன்
என்றென்றும் நட்புடன்
மாயா

இது ராமேஸ்வரம் பற்றி கதைக்கும் ஓர் வீடியோ காட்சி



22 பின்னூட்டம்(கள்):

Anonymous,   

மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இந்த விமர்சனத்தினை எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ம்ம்ம்....

Muruganandan M.K. ஞாயிறு, ஜனவரி 06, 2008 இரவு 10:42:00 pm  

ஆழ்ந்து ரசித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். எமது வாழ்வை கொச்சைப்படுத்தாமல் காட்டியிருக்கிறார்கள் எனப் புரிகிறது. பார்க்க ஆவலாக இருக்கிறது. முயல்வேன்

Nimal ஞாயிறு, ஜனவரி 06, 2008 இரவு 10:48:00 pm  

எனக்கும் இதே எண்ணம் தான் ஏற்பட்டது...

//குப்பைப் படங்களை எல்லாம் ஓடியோடி வாங்கும் இலங்கை மற்றும் புலம் பெயர் சினிமா வர்த்தகர்கள் இதை ஏன் வாங்க மறுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.//

தூங்குவது போல் நடிப்பவர்களை...?!

வந்தியத்தேவன் ஞாயிறு, ஜனவரி 06, 2008 இரவு 11:23:00 pm  

ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ணில் தெரியாது. அவர்களுக்கு ஸ்ரேயாவின் இடுப்பும், நயந்தாராவின் மார்பும் தெரிகின்ற படங்கள் என்றால் உடனடியாக ஓடிப்போய் வெளியிடுவார்கள். இதற்கான காரணம் அவர்கள் வியாபாரிகள். ஈழத்தமிழராக இருந்தும் அவர்களுக்கு ஈழத்தைவிட ரஜனியின் மேலும் அஜித்தின் மீதும் நம்பிக்கை தங்கள் கல்லாவை நிரப்புவார்கள் என்று.

மணிரத்னம் என்ற அதிமேதாவி கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில்(பல யதார்த்தங்களை மீறிய படத்தை எப்படி அழைப்பது?) ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார். இதற்கான காரணம் அனைவருக்கும் புரியும்.

ஆனாலும் நம்பவர்கள் சிவாஜிக்கு காட்டிய அக்கறையை இராமேஸ்வரம், காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களில் காட்டியிருக்கலாம்.

Anonymous,  திங்கள், ஜனவரி 07, 2008 இரவு 3:59:00 am  

அறிமுகத்துக்கு நன்றி மயூரன். பார்க்க முயல்கிறேன்.
ஆழியாள்

மாயா திங்கள், ஜனவரி 07, 2008 இரவு 9:15:00 am  

* டொக்டர்.எம்.கே.முருகானந்தன் ஐயா வருகைக்கு நன்றி
// ஆழ்ந்து ரசித்து விரிவாக எழுதியுள்ளீர்கள். எமது வாழ்வை கொச்சைப்படுத்தாமல் காட்டியிருக்கிறார்கள் எனப் புரிகிறது. பார்க்க ஆவலாக இருக்கிறது. முயல்வேன் // படத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பார்ப்பதற்காகவேனும் ஒருமுறை பாருங்கள்

* //நிமல் said
தூங்குவது போல் நடிப்பவர்களை..?!//இனித்திருந்திக்கொள்வார்கள் என நம்புவோம்

* //வந்தியத்தேவன் Said ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ணில் தெரியாது. அவர்களுக்கு ஸ்ரேயாவின் இடுப்பும்இ நயந்தாராவின் மார்பும் தெரிகின்ற படங்கள் என்றால் உடனடியாக ஓடிப்போய் வெளியிடுவார்கள். இதற்கான காரணம் அவர்கள் வியாபாரிகள். ஈழத்தமிழராக இருந்தும் அவர்களுக்கு ஈழத்தைவிட ரஜனியின் மேலும் அஜித்தின் மீதும் நம்பிக்கை தங்கள் கல்லாவை நிரப்புவார்கள் என்று.

மணிரத்னம் என்ற அதிமேதாவி கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில்(பல யதார்த்தங்களை மீறிய படத்தை எப்படி அழைப்பது?) ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார். இதற்கான காரணம் அனைவருக்கும் புரியும்.

ஆனாலும் நம்பவர்கள் சிவாஜிக்கு காட்டிய அக்கறையை இராமேஸ்வரம்இ காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களில் காட்டியிருக்கலாம்.// நிச்சயமாக இந்கு இன்னொன்றையும் சொலல வேண்டும் ஐங்கரன் இன்ரெர்னசல்காரரும் யாழ்ப்பாணத்தவர் தான் [இணுவில்]

* ஆழியாள் இரண்டாம் சொக்கன் மற்றும வரவுகளுககும் பின்னூட்டங்களுக்கும் நன்றி

நந்தவனத்து ஆண்டி செவ்வாய், ஜனவரி 08, 2008 இரவு 10:57:00 am  

//ஐங்கரன் இன்ரெர்னசல்காரர்களுக்கு இந்தப் படம் கண்ணில் தெரியாது அவர்களுக்கு ஸ்ரேயாவின் இடுப்பும், நயந்தாராவின் மார்பும் தெரிகின்ற படங்கள் என்றால் உடனடியாக ஓடிப்போய் வெளியிடுவார்கள் இதற்கான காரணம் அவர்கள் வியாபாரிகள் ஈழத்தமிழராக இருந்தும் அவர்களுக்கு ஈழத்தைவிட ரஜனியின் மேலும் அஜித்தின் மீதும் நம்பிக்கை தங்கள் கல்லாவை நிரப்புவார்கள் என்று .

மணிரத்னம் என்ற அதிமேதாவி கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில்(பல யதார்த்தங்களை மீறிய படத்தை எப்படி அழைப்பது?) ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார். இதற்கான காரணம் அனைவருக்கும் புரியும்
சரியாகச்சொன்னீர்கள் வந்தி காரர்மீது கடுமையான கோவமோ ?

சரி இதையும் பாருங்கோ
http://jaffnasrilanka.blogspot.com

வசந்தன்(Vasanthan) செவ்வாய், ஜனவரி 08, 2008 மதியம் 12:02:00 pm  

இரண்டாம் சொக்கன் எழுதிய பின்னூட்டம்தான் எனது கருத்தும்.
;-)

ஜீவா தனியாளாகப் போய் காவல் நிலையத்தை நொருக்குவதும் அங்கிருக்கும் காவலர்களை உதைப்பதும், அப்படி அவர் உதைக்கும் முதற்காவலாளி இருபதடி பறந்துபோய் விழுவதும், அப்போது கூண்டுக்குள்ளிருக்கும் 'ஈழத்துத் தோழர்கள்' "எங்கட ஜீவன் வந்திட்டான்" என்று ஆர்ப்பரிப்பதும் விஜய், ரஜனி படங்களைப் பார்ப்பதுபோல்தான் இருந்தது.

பேச்சுவழக்கு நீங்கள் சொல்வதுபோல் இருக்கவில்லையே?
தெனாலி படத்துக்கு ஈழத்து வானொலி நாடகங்களைக் கேட்டு கமல் தமிழ் பழகினார். அந்த நகைச்சுவை நாடகத்தமிழை ஓரளவுக்குச் சரியாகவே படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் ராமேஸ்வரத்தில் அந்தளவுக்குக்கூட எதுவுமில்லை என்பதே எனக்குப்பட்டது.

ஜீவா பாவனாவைப் பார்த்து 'உனக்குப் பைத்தியமா?' என்கிறார். அடுத்த சில நிமிடங்களில் 'உனக்கு விசரா?' என்கிறார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படியான படங்களால் ஏதாவது மாற்றமிருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. எம்மக்கள் மீது ஒரு பச்சாத்தாபத்தையும் கழிவிரக்கத்தையும் கோரிநிற்பதை விட்டு வேறெதையும் சாதிப்பதாகத் தெரியவில்லை. "ஐயோ பாவம்" என்ற உணர்வைத்தான் இப்படங்கள் ஊட்டவல்லன. இதைத்தாண்டி ஈழத்தவர்களின் அரசியற்பிரச்சினை எக்கட்டத்திலும் பேசப்பட்டதில்லை. அப்படியான படங்கள் வரப்போவதுமில்லை.

ராமேஸ்வரம் போன்ற படங்களை வெளியிட தணிக்கைக்குழுவுக்கு என்ன தடையிருக்குமென்று விளங்கவில்லை. வேண்டுமானால் தாங்கள் இவற்றை வெளியிடுகிறோம் என்று மார்தட்டி தமது 'ஜனநாயகத் தன்மையைப்' பறைசாற்றவே இவை உதவும்.

Anonymous,  செவ்வாய், ஜனவரி 08, 2008 இரவு 3:21:00 pm  

இரண்டாம் சொக்கனை விடுங்கோ

//ஜீவா தனியாளாகப் போய் காவல் நிலையத்தை நொருக்குவதும் அங்கிருக்கும் காவலர்களை உதைப்பதும், அப்படி அவர் உதைக்கும் முதற்காவலாளி இருபதடி பறந்துபோய் விழுவதும், அப்போது கூண்டுக்குள்ளிருக்கும் 'ஈழத்துத் தோழர்கள்' "எங்கட ஜீவன் வந்திட்டான்" என்று ஆர்ப்பரிப்பதும் விஜய்,ரஜனி படங்களைப் பார்ப்பதுபோல்தான் இருந்தது.//

இதை மட்டும் ஒத்துக்கொள்கிறேன் மற்றும்படி . . .

உண்மையைச்சொல்லுங்கோ கமலகாசன் கதைத்தது இலங்கைத்தமிழா ?

அப்படியோ நாங்கள் கதைக்கிறநாங்கள் ?

நான் பிறந்து 20 வயசு வரையும் யாழ்ப்பாணத்திய இருந்தனான் இப்ப 4 வருடமாய் கொழும்பில இருக்கிறன் ஒரு இடத்தில கூட தெனாலி படத்தில கமல் கதைத்ததை போல கதைத்ததைக்கண்டதில்லை (நாடகப்பாணியில்)

ஆனால் எங்கட எழுத்தில சத்தமிருக்கும் அது வேறகதை :)

ஆனால் இந்தப்படத்தில ஏலவே சொன்ன மாதிரி ஓரளவேணும் ஈழத்தமிழ் கதைக்கினம்

இதைப்பற்றி மேலும் கதைக்க நான் தயாரில்லை

தமிழ்மகன் செவ்வாய், ஜனவரி 08, 2008 இரவு 3:26:00 pm  

மிக நேர்த்தியான விமர்சனம். உண்மை சுடரும் பதிவு.

மாயா புதன், ஜனவரி 09, 2008 இரவு 1:28:00 pm  

// தமிழ்மகன் said...
மிக நேர்த்தியான விமர்சனம். உண்மை சுடரும் பதிவு.//

கனபேருக்கு இது விளங்குதில்லை கண்டியளே :)

நந்தவனத்து ஆண்டி புதன், ஜனவரி 09, 2008 இரவு 4:11:00 pm  

// இப்படியான படங்களால் ஏதாவது மாற்றமிருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. எம்மக்கள் மீது ஒரு பச்சாத்தாபத்தையும் கழிவிரக்கத்தையும் கோரிநிற்பதை விட்டு வேறெதையும் சாதிப்பதாகத் தெரியவில்லை. "ஐயோ பாவம்" என்ற உணர்வைத்தான் இப்படங்கள் ஊட்டவல்லன. இதைத்தாண்டி ஈழத்தவர்களின் அரசியற்பிரச்சினை எக்கட்டத்திலும் பேசப்பட்டதில்லை. அப்படியான படங்கள் வரப்போவதுமில்லை //
இதுவரை Ok ஒத்துக்கொள்கிறேன்

ஆனால்
// தெனாலி படத்துக்கு ஈழத்து வானொலி நாடகங்களைக் கேட்டு கமல் தமிழ் பழகினார். அந்த நகைச்சுவை நாடகத்தமிழை ஓரளவுக்குச் சரியாகவே படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் ராமேஸ்வரத்தில் அந்தளவுக்குக்கூட எதுவுமில்லை என்பதே எனக்குப்பட்டது.
// உங்களுக்கு இது ஞாயமாப்படுதா உண்மையைச்சொல்லுங்கோ
உண்மையைச்சொல்லுங்கோ கமலகாசன் கதைத்தது இலங்கைத்தமிழா ?
அப்படியோ நாங்கள் கதைக்கிறநாங்கள் ?
யாழ்ப்பாணத்தில ஒரு இடத்தில கூட தெனாலி படத்தில கமல் கதைத்ததை போல கதைத்ததைக்கண்டதில்லை ஏன் நீங்க இப்படியோ கதைக்கிறநீங்கள் அப்படிக்கதைத்தால் காமடியாயிருக்குமல்லவா :))

//ஜீவா தனியாளாகப் போய் காவல் நிலையத்தை நொருக்குவதும் அங்கிருக்கும் காவலர்களை உதைப்பதும், அப்படி அவர் உதைக்கும் முதற்காவலாளி இருபதடி பறந்துபோய் விழுவதும், அப்போது கூண்டுக்குள்ளிருக்கும் 'ஈழத்துத் தோழர்கள்' "எங்கட ஜீவன் வந்திட்டான்" என்று ஆர்ப்பரிப்பதும் விஜய்ரஜனி படங்களைப் பார்ப்பதுபோல்தான் இருந்தது//

ஏன் இப்பகூட இயக்கஅண்ணாமார் எங்களுக்கு தானே இப்பமட்டுமல்ல எப்பவும் தான் அது தெரியாமல் கதைக்கிறியள் நாங்க நினைக்கிறதவிட எத்தனைமடங்கு பெரிய வேலையெல்லாம் செய்யினம் தெரியுமா

அதவிட்டுட்டு சும்மா பின்னூட்டம் போடணும் எண்டு போடாதீங்க கொஞ்சம் யோசிச்சுபாருங்க எல்லாம் தெரியும்

மணிரத்னம் கன்னத்தில் முத்தமிட்டால் என்ற குப்பைப் படத்தில் ஈழத்தில் இல்லாத மலைகளையும் அத்துடன் சில நடைமுறைக்குத் ஒவ்வாத சில காட்சிகளையும் காட்டியிருப்பார் அதையிட இத பறவாயில்லை தானே ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) வியாழன், ஜனவரி 10, 2008 இரவு 3:40:00 am  

படம் இன்னும் பார்க்கவில்லை.
பார்ப்போம்..பின்...உங்கள் விமர்சனம்
பார்ப்போம்.

வசந்தன்(Vasanthan) வியாழன், ஜனவரி 10, 2008 இரவு 1:58:00 pm  

நந்தவனத்து ஆண்டி,

எந்த இயக்க அண்ணாமார் தனியாளாப் போய் ஆயுதத்தோட நிக்கிற பத்துப்பேரை கையால பந்தாடி வந்தாங்கள் எண்டு சொல்லுங்கோ, நானும் ஈழப்போராட்டத்தின்ர எனக்குத் தெரியாத சம்பவங்களைத் தெரிஞ்சு கொள்ளிறன்.
புலிகள் அப்படியொரு வடிகட்டின முட்டாளாகச் செயற்படுவாங்களெண்டோ, அதைவிடவும் முட்டாள்தனமாக துவக்கைக் கையில வச்சிருக்கிறவன் அதால சுடாமல் சினிமாவில வாறமாதிரி நாயகனிட்ட அடிவாங்கிற மாதிரி ஆமிக்காரனும் அடிவாங்கிச் சாவானெண்டோ நான் நினைக்கேல.

ராணி கொமிக்ஸ் மாயாவிக் கதையள் மாதிரி உங்கயும் ஆராவது புலிகளைப்பற்றி கதைவிடத் தொடங்கீட்டாங்களோ?

"ஓயாத அலைகள் - 3" தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் அடங்கிய தொகுப்பையோ அல்லது ஆனையிறவு மீட்புத் தொடர்பான சிறப்புத் தொகுப்பையோ பார்க்கும்படி பரிந்துரைக்கிறேன். குடாரப்புத் தரையிறக்கத்துக்கு முன்பாக போராளிகளோடு தலைவர் பிரபாகரன் கதைக்கும் காட்சி அதில் வெளியிடப்பட்டது. தலைவர் சொல்கிறார்,

" 'சின்னப் பாம்பெண்டாலும் பெரிய தடியால அடி' எண்டு எங்கட மக்களிட்ட ஒரு பழமொழியிருக்கு. அதுபோலதான் பலம் குறைந்த எதிரியாக இருந்தாலும் இயன்றளவுக்கு எமது பலத்தைத் திரட்டித் தாக்க வேண்டும். அதுதான் வெற்றியின் இரகசியம். ஓடுகிற ஆமிதானே என்று இளக்காரமாகப் போய் அடிவாங்குவது படுமுட்டாள்தனம்."


இதையெழுதேக்க முந்தி பதிவரொருவர் (சயந்தன்) வேறொருவருக்குப் பம்பலாச் சொன்னதுதான் ஞாபகம் வருது:
"பின்னூட்டம் போடவேண்டுமெண்டதுக்காக பேப்பின்னூட்டம் போடக்கூடாது"

~~~~~~~~~~~~~~~~~~~~~~

//உண்மையைச்சொல்லுங்கோ கமலகாசன் கதைத்தது இலங்கைத்தமிழா ?
//

ஒரே சொல்லிற் சொன்னால் 'இல்லை'.

ஆனால் இந்தக் கேள்வி என்னிடம் ஏன் கேட்கப்படுகிறதென்று விளங்கவில்லை. முதலில் இலங்கைத் தமிழென்று பொதுப்படையானவொன்று இல்லையென்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இதுதொடர்பில் பலவிவாதங்கள், இடுகைகள் வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுவிட்டன.

நான் எங்காவது கமல் இலங்கைத் தமிழையோ யாழ்ப்பாணத் தமிழையோ சரியாகக் கதைத்தாரென்று சொல்லியிருந்தால் இக்கேள்வி என்னைப்பார்த்துக் கேட்பது பொருத்தம். கமல் அப்படிக் கதைக்கவில்லையென்பதை இரண்டரை வருடங்களின் முன்பே நானும் வலைப்பதிவில் எழுதியிருக்கிறேனே?

மீண்டும் எனது பின்னூட்டத்திலிருந்து குறிப்பிட்ட வசனத்தை மேற்கோளிடுகிறேன்.
//அந்த நகைச்சுவை நாடகத்தமிழை ஓரளவுக்குச் சரியாகவே படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். //
இதையே மேற்கோளிட்டுவிட்டு, கமல் இலங்கைத்தமிழையோ யாழப்பாணத்தமிழையோ சரியாகக் கதைத்தார் என்று நான் சொன்னதாகத் திரித்துக் கேள்வி கேட்கிறீர்களே, இது நியாயமா?
எனது பின்னூட்டத்தைக் கேள்விக்குட்படுத்த விரும்பினால் நீங்கள் கேட்க வேண்டியது:
"கமல் இலங்கை வானொலியில் இடம்பெறும் நாடகத் தமிழைச் (குறிப்பாக கே.எஸ். பாலச்சந்திரன் போன்றவர்களின் நகைச்சுவை நாடகத்தமிழை) சரியான முறையில் கதை்திருக்கவில்லை" என்பதையே.
வட்டுக்கோட்டைக்கு என்ன வழியெண்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு எண்ட விளையாட்டு வேண்டாமே?
~~~~~~~~~~~~~~~~
ஒன்றைச் சொல்லிவிட்டு, பிறகு இதைத்தானே நான் சொன்னேன் என்று விளங்கப்படுத்தும் கொடுமை சிலருக்கு அடிக்கடி வரும். (மிக அண்மையில் பெயரிலி - மயூரன் பின்னூட்ட விளக்கங்கள்) இப்போது எனக்கும் வந்துவிட்டது.
அவ்வகையில் என்னைப் பெரியாளாக்கிய நந்தவனத்து ஆண்டிக்கும் மாயாவுக்கும் நன்றி.
;-)
நான் நினைச்சன் எங்கட பக்கம்தான் சரியான வெக்கையெண்டு. ;-)

வசந்தன்(Vasanthan) வியாழன், ஜனவரி 10, 2008 மதியம் 2:03:00 pm  

தமிழகத்தார் எடுக்கும் திரைப்படங்களில் ஈழத்துக் கதைவழக்கு இடம்பெறுவது தொடர்பாக, தெனாலியிலுள்ள மொழிவழக்குக் குறையையும் குறிப்பிட்டு 2005 - மேயில் நானெழுதிய இடுகையில் குறிப்பிட்டிருந்த விடயத்தையும் இங்குக் குறிப்பிடுகிறேன்.

"படமெடுப்பவர்கள், ஈழத்தில் எந்த வட்டார வழக்குப் பேச்சுவழக்கைப் படத்திற் கொண்டுவர முற்படுகிறார்களோ, அந்தப் பகுதியோடு இறுதிவரை தொடர்பிலிருக்கும் மக்களைக் கொண்டு பின்னணிக் குரற்பதிவை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்ச்சினிமாவில் 95 வீதமான காட்சிகள் படத்தொகுப்பின்போது மீளக்குரல் கொடுத்துத் தொகுக்கப்படுவதால் இது இன்னும் இலகுவானது."

மாயா வெள்ளி, ஜனவரி 11, 2008 மதியம் 12:19:00 pm  

நான் மாயா

இப்போ மறுமொழிமட்டறுத்தல் எனது வலைப்பூவில் நடைபெறுவதில்லை அதுவாகவே மட்டறுத்து வெளியிடுகிறது [அந்தப்பிழையை எடனடியாகக்கண்டுபிடிக்கமுடியவுமில்லை]

பின்னுர்ட்டங்களைக்கவனமாகப்போடுங்கள் :(

எனக்கு இன்னும் Google Account பிரச்சினை தீர்ந்தபாடில்லை :((

Anonymous,  வெள்ளி, ஜனவரி 11, 2008 மதியம் 12:20:00 pm  

ஓயாத அலைகள் - 3 தொடர்பான ஒளிப்படக் காட்சிகள் அடங்கிய தொகுப்பையோ அல்லது ஆனையிறவு மீட்பு ஒளிப்படக் காட்சிகள் பார்க்கும்படி எல்லாம் நீங்கள் சொல்லித்தான் நாங்க பார்க்கவேணுமெண்டில்ல

Anonymous,  வெள்ளி, ஜனவரி 11, 2008 இரவு 1:56:00 pm  

வீடியோ பார்க்கும்படி சொல்லப்பட்டது நந்தவனத்து ஆண்டிக்குத்தானே?
உதார் இடையில குறோஸ் ஃபயருக்க?

மாயா வெள்ளி, ஜனவரி 18, 2008 இரவு 3:05:00 pm  

//Anonymous said...
வீடியோ பார்க்கும்படி சொல்லப்பட்டது நந்தவனத்து ஆண்டிக்குத்தானே?
உதார் இடையில குறோஸ் ஃபயருக்க?//

சரியாக்கேட்டீங்க :))

வசந்தன் அண்ணையிட்டையும் ஆண்டியிடமும் மாட்டிக்கோண்டு என்னபாடுபடப்போறாரோ தெரியாது

வெண்காட்டான் புதன், ஜனவரி 23, 2008 இரவு 1:26:00 am  

வணக்கம். ஒரு படத்தில் நாம் அனைத்தையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாங்க்ள எதிர்பார்க்கிற அளவுக்கு இந்தியாவில் இருந்து எமக்கு ஆதரவாய் ஒரு படம் வருவதென்பது எவ்வளவு கடினமானது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்கம் (here i dint mean ruling party. i mean the forigien policy of india towords tamil problem) எவ்வளவு கேவலமாக எமது வாழ்க்கையை நசிக்கிறது என்பது உங்ளுக்கு தெரிந்திருக்கும். அந்த நிலையில் இந்த படம் ஓரளவுக்கு எங்கள் நிலைமையை சொல்லி இருக்கு. அடுத்ததாக தெனாலி பற்றி... ஒன்றை உணர்ந்துகொள்ளுங்கள். கமல் இலங்கைத் தமிழை ஒழுங்காக வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அந்த படத்தில் எங்கள் பிரச்சனையை எப்படி கையாண்டார் என்பதைப் பாருங்கள். 2 காட்சிகள் மிக அருமையாக ஈழத்தமிழரின் நிலையை படம் பிடித்துக்காட்டியிருக்கின்றார். என்னைப் பொறுத்தவரையில் கமல் அந்த படத்தில் மிகச் சிறப்பாக எங்களுககு சார்பாக நின்றார். ஒப்பீட்டு ரீதியில் நான் சொல்கிறேன். எமது போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ஈடுஇனையில்லை. ஐங்கரன் சர்வதேசம் பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. ஆனால் பணத்திற்காகத்தான் எல்லாம். இவர்கள் இந்த படத்தை எப்படி வெளியிட்டார்களோ தெரியாது. நாங்க்ள ஆனந்தவிகடன் குமுதம் வாங்குவது போல இந்தியாவில் இலங்கையின் இருக்கிறம் சஞ்சிகை மட்டுமல்ல எந்த ஒரு பத்திரிகையும் விற்க முடியாது. அதற்கு காரணம் அவர்களின் சனநாயக இந்தியாவின் பெருமைமிகு வெளியுறவுக் கொள்கை. இந்நிலையில் இது போன்ற படங்களும் எங்கள் பணத்தை நம்பியும் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவர்களால் இந்தயி தேசியம் வழிய வழிய (அர்சுன் விஜுயகாந்த் பொன்றவர்களின் படங்கள்) மனித உரிமைகளை மதிக்காத படங்களை எடுத்தால் அவர்களால் நல்ல பணத்தையும் பார்க்கலாம். நிம்மதியாக பொலிஸ் தொல்லை இல்லாமல் இருக்கவும் முடியும். இந்நிலையில் என்னைப் பொறுத்தவரை எமது சார்பாக வரும் படங்களை வரவேற்பது இது போன்ற மேலும் படங்களை வர வைத்து எமக்கான எமது தமிழக உடன்பிறப்புகளின் அன்பைப் பெறுவோம். மிகக் கடுமையான ஒரு இரும்புத் திரைக்குள் இருக்கும் தமிழக மக்கள் இப்படியான நிலையில் தான் எம்மை விளங்கிக்கொள்ள முடியும்.
கண்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எம்மையே எமாற்றி எமது ஆழ் மனதை மாற்றும் கொடிய கேவலமான சமூகத்தினால் எடுக்கப்ட்ட படம். அதில் வரும் போராளிகள் மிகச் சிறுவயதுபோராளிகள் என்ற தோற்றத்தை ஆழ் மனதில் எற்படுதும். இது போல பல உண்டு.

மாயா புதன், ஜனவரி 30, 2008 இரவு 4:00:00 pm  

// கண்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல எம்மையே எமாற்றி எமது ஆழ் மனதை மாற்றும் கொடிய கேவலமான சமூகத்தினால் எடுக்கப்ட்ட படம். அதில் வரும் போராளிகள் மிகச் சிறுவயதுபோராளிகள் என்ற தோற்றத்தை ஆழ் மனதில் எற்படுதும். இது போல பல உண்டு.//


இத மிகவும் உண்மை தான்

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP