ராமேஸ்வரம் இலங்கை அகதிகளைப்பற்றி அவர்களது யதார்த்தத்தைச்சொல்லும் அருமையான கதைக்கருவுள்ள படம் ஆக்கபூர்வமான, இனிய படைப்பபாக வெளிவந்திருக்கின்றது . அத்துடன் ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெயரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். மற்றவர்களுக்கெல்லாம் (அக்கறை உள்ளவர்கள போல் காட்டிக்கொள்பவர்களுக்கெல்லாம் ) ஏதொ இலங்கையரைப்பற்றிய திரைப்படம் போல் தான் தெரியும் . தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அண்மையில் தான் இலங்கையில் வெளியானது அதுவும் வசதிகள் குறைந்த திரையரங்கு ஒன்றில் தான் வெளியானது . குப்பைப் படங்களை எல்லாம் ஓடியோடி வாங்கும் இலங்கை மற்றும் புலம் பெயர் சினிமா வர்த்தகர்கள் இதை ஏன் வாங்க மறுத்தார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
சரி சரி படத்துக்கு வருவோம் . . .
* இயக்கம் : செல்வம் , ஓர் அழகான கதையைச் சொல்லியிருக்கிறார் ஆரம்பத்தில் யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் கனடா பிரான்ஸ் அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் அவர் , கடைசியில 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று முடிக்கிறாரே ! அங்கேயே இயக்குனரின் திறமை வெளிப்படுகிறது
* இசை : தமிழ் ஈழத்தில் அளவெட்டியில் ( நான் பிறந்த ஊர் என்றால் சும்மாவா ) பிறந்து, ஈழத்திலிருந்து பிரான்சுக்கு அகதியாய் சென்று வாழ்ந்த இசையமைப்பாளர் நிரு தமிழக தமிழர்களின் இதயங்களில் மிக விரைவில் இடம்பிடிப்பார்.
* ஒளிப்பதிவு : குருதேவ் - வெற்றிக்கு சபாஷ் அழகாக படம் பிடிக்கப்பட்ட ராமேஸ்வரமும், கடல் மற்றும் கடல் சார்ந்த இடமும் அருமையாக கண்முன்னே விரிகிறது குறிப்பாக அதிலும் குறிப்பாக 'எல்லோரையும் கூட்டிப்போக கப்பல் வருமா' என்கிற பாடல் வரிகளுக்கு காட்சிகள் அழகோ அழகு
* நடிகர்களாக தமிழகத்தின் பிரபல நடிகர் ஜீவா மற்றும் பாவனா இருவரும் நடித்துள்ளனர். ஜீவா ஜீவன் என்ற பாத்திரத்திலும் பாவனா வசந்தி என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கிறார் பாவனாவின் அப்பாவாக நடித்திருப்பவர் (மலையாள நடிகர் லால்) மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போஸ்வெங்கட் படத்தில் பாவனாவின் முறைமாமன், ஒருதலையாக பாவனாவை காதலிப்பவர், பொலீஸ் அதிகாரியாக வருகிறார். அது மட்டுமல்லாமல் பல ஈழத் தமிழர்கள் அப்படத்தில் நடித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மணிவண்ணன் , இவர் 30 நிமிட காட்சிகளில் இருந்தாலும், ஈழ ஆசிரியர் ஒருவரை கண்ணுக் கொண்டு வந்து மறைந்து போகிறார். இவர் இழப்புக்களைப்பற்றி பேசும் வசனங்கள் முகத்தில் அறைந்தாற்போல் இருக்கின்றன
கதை பெரிதாக ஒன்றுமில்லை கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை இலங்கையிலிருந்து அகதியாக ராமேஸ்வரம் வரும் ஜீவன் மற்றும் ஏனையொர் மீது பரிவு காட்டுகிறார் ஊர் பெரிய மனிதர் . பெரிய மனிதரின் மகள் வசந்தி ஜீவன் மீது பரிவு காட்டுகிறார். அவளைத் தவிர்க்கும் ஜீவன், ஒருகட்டத்தில் மனம் மாறி நேசிக்கிறார் .இருவருக்குமான காதல் இறுகுகிறது. எதிர்பார்த்தது போன்றே அவர்கள் காதலுக்கு வசந்தி வீட்டில் வசந்தியின் முறைமாப்பிள்ளையும் காதலுக்கு எதிராக எதிர்ப்பு. காதலியைக் கைப்பிடிக்க வருவேன் என்று சொல்லிவிட்டு ஜீவன் தன் ஊர் மக்களுடன் தாயகம் செல்கிறார்.திரும்பி வந்து காதலியைக் கைப்பிடித்தாரா என்பதுதான் கதை.
இத்திரைப்படத்தில் கவனிக்கப்படவேண்டியவை
* இங்கே கதையைவிட இலங்கைத்தமிழர் விடையத்தைக்கையாண்ட விதம் தெனாலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்று ஈழத்தமிழரைக் கொச்சைப்படுத்தாத படமாக இருப்பது மிகவும் கவர்ந்துள்ளது புலம் பெயர் தமிழர்கள் சிறுவயதில் அகதிவாழ்க்கை வாழ்ந்ததை அப்படியே மனதில் திரும்பவும் புரட்டிப்போட்டிருக்கும்
* வழமையாக திரைப்படங்களில் கதாபத்திரம் ஈழத்தவராக இருந்தா
ல் அவர் பேசும் மொழி என்று ஈழத்து பெருமாலும் யாழ்ப்பாண மொழியைப் பேசுவதாக நினைத்து கொலை செய்வார்கள். தென்னாலி படத்தில் கமலாகாசன் கொலை செய்கிறார். (தெனாலியை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது) ஆனால் இப்படத்தில் நாயகன் 90 வீதமாகவேனும் ஒழுங்கான இலங்கைத்தமிழில் நடிக்கிறார்கள் . இதற்கு பாராட்டவேண்டும். பேசிக் கொலை செய்வதை விட பேசாமல் இருக்கலாம். நடிகர் மணிவண்ணன் ஒரளவு ஈழத்து மொழியில் பேச முயற்சித்து இருக்கிறார். கமலை விட நன்றாகப் பேசியிருக்கிறார். படத்தில் சில பாத்திரங்கள் யாழ்ப்பாண மொழியில் நன்றாகப் பேசி இருக்கிறார்கள்.
நெஞ்சைத் தொடும் வசனங்கள் ! அதே சமயம் எளிமையாகவும்...! உதாரணத்திற்கு சில
* ஊர் பெரியவர் சொல்லும் "உங்க ஊரையும் எங்க ஊரையும் கடல் பிரிச்சிருக்கலாம். ஆனா கீழே பூமி ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு" என்ற வசனம்
* அகதிகள் முகாம், என்பதை ஜீவா 'புலம்பெயர்ந்தோர் முகாம்' என்று மாற்றுவதும், அதைத் தொடர்ந்து 'பெயரை மாற்றினால் எலலாம் மாறிவிடுமா ?' என்று ஈழப்பெண் கேட்கும் போது, 'எல்லாமும் மாறனும், முதலில் இதை மாற்றுகிறேன், எனது பங்களிப்பு என்று இதுவாக இருக்கட்டும்' என்ற வசனம்
* ஊர் பெரியவர் நிவாரணப்பொருட்களைக்கொண்டு வரும்போது "முகம் தெரியாத ஆட்கள் கொடுப்பதை வாங்கும்போது பிச்சைனு எடுக்கும் உணர்வு வந்துவிடும் " என்று ஜீவா கூறுவதும்
* இவ்வளவு பெரிய தழும்பா? என்று கேட்கும் அதிகாரியிடம், இதுதான் எங்க ஊர்ல சின்ன தழும்பு என்று அலட்சியம் காட்டி மணிவண்ணன் கூறுவதும்
* அகதித் தமிழன் ஒருவர் செயற்கைக் காலுடன் இருப்பார் . அது தெரியாத போலீஸ்காரன் அவரை உதைப்பார். செயற்கைக் கால் பறந்து போகும் உடனே அருகிலிருக்கும் பெரியவர் கீழே விழுந்தவரிடம் மன்னிப்புக்கேட்கு முன் அவர்(அகதித் தமிழன்) பேசும் வசனத்தையும் உணர்ச்சியையும் இதுவரை எந்த ஈழத்துப் படமும் இவ்வளவு தத்ரூபமாகப் பேசிவிடல்லை.
இப்படியான இடங்களில் இயக்குனருக்கும் வசனகர்த்தாவிற்கும் வாழ்த்துச்சொல்லலாம் !
சரி இனி பாடல்களுக்கு வருவோம் ஈழத்தமிழ் உறவுகளின் உணர்வுகளை, வலிகளை நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி அனைவரும் எழுதிக் கொடுத்திருக்கின்றார்கள். அவர்களை என்றுமே பாராட்டலாம்.
1] நேற்றிருந்தோம் எங்கள் வீட்டினிலே
நிலவெறியும் எங்கள் காட்டினிலே
யார் தந்த சாபம் இது?
யார் செய்த பாவம் இது?
கண்ணீர்த் துளியும் வலியும் சேர்ந்த கூடாய்க் கிடக்கின்றோம்.
உயிரை அங்கே வைத்தோம்
அதனால் உயிரைச் சுமக்கின்றோம்
எத்தனை உறவுகள் தொலைத்தோம்
எதற்கு நாங்கள் பிழைத்தோம்!
என்று தொடர்கிறது
2] எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா..?
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..?
அட தூரம் கண்ணில் வருமா ஈரம் கண்ணில் வருமா?
யாரும் இல்லா ஊருக்குள்ள தெய்வம் தேரில் வருமா?
எங்கள் பூமி தீயின் வசமே
எம்மைச் சுற்றி அலைகள் எழுமே
உண்மைத் தோளில் மாலை விழுமே
நம்பிக்கை நாளை உரமாகும்!
நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்
ஊதிடும் நாள் வருமா?
கும்பிடு சந்தையில் புகையிலை
வாங்கிட நாள் வருமா?
கல கலனென்னு பாடசாலைக்குள்ள
படிக்கிற நாள் வருமா?
என்று முதலில் சிறுமியின் குரல் ஒலிக்க கண்களில் நீர் வழிகிறது. இந்தப்பாடலைக்கேட்கும்போது பழைய அகதி வாழ்க்கைகள் நினைவுக்கு வரகின்றன . 1995 இல் இதே போன்று நான் கூட அகதியாய் சாவகச்சேரியில் வாழ்ந்தவன். அங்கே வானமே கூரையாக சிறுவயதில் பட்ட கஸ்டங்கள், வேதனைகள் இப்பவும் நெஞ்சில் பதிந்து இருக்கின்றது ( பாடியோர் மாணிக்கவிநாயகம், கரிச்சரன், சிரேயா, ரேஷ்மி)
3] அலைகளின் ஓசைகள் தானடடி
அகதியின் தாய்மொழ ஆனதே
எனக்கென யாரோ..?
என்னை நான் தினம் கேட்கிறேன்
அலைகளின் ஓசைகள் தானடா
அகதியாய் ஏங்குவனேடா..
உனக்கென நானே ஒற்றைப்
பெண் என வாழ்கிறேன்
தன்னைத் தொலைத்தவன் நானே
மண்ணைப் பெறும்வரை காத்திருப்பேன்
உன்னைத் தொலைத்து விட்டாலே
இங்கோர் அகதியாய் நானிருப்பேன்! என்று தொடர்கிறது
(பாடியோர் கரிச்சரனும் கல்யாணியும் )
போர் நடந்தாலும் உங்கள் ஊரில் யாரும் காதலிக்கவில்லையா ? , குழந்தை பிறக்கவில்லையா?, வாழ்க்கை தொடரவில்லையா? என்னும் கேள்விகளின் பின் மலரும் காதல் பாடலாக இது வருகிறது
மொத்தத்தில் :(
* அகதிகளின் வாழ்க்கை பின்னணியில் சொல்லப்பட்டதாலோ என்னவோ, காதல் கதை என்றாலும் படம் முழுக்க ஒரு சோகம் இழையோடுவதாக உணர்வதை தவிர்க்க முடியவில்லை.இருப்பினும் காதல் கதைக்கு இலங்கை அகதிகளின் வாழக்கை சோகங்களை வெளிப்படுத்த முயற்சித்த இயக்குனரை பாராட்டலாம் !
* இந்திய சென்சார் போட் அனுமதித்திருக்கும் அளவு மேலும் சிறப்பாக ஈழத்து கதைகளை சொல்ல முடியும் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது. இந்தப்படத்தால் இந்திய சென்சாருக்குள் ஈழத்து கதைகளை சொல்ல முடியாது என்று பொய்க்கருத்துக்களை பரப்பிவந்த பெரிய இயக்குனர்களின் கருத்து உடைபட்டுப் போயிருக்கிறது
* ஈழத்தமிழர்களின் 'நலன்' என்று வாய்கிழிய பேசும் நடிகர்கள், அரசியல்வாதிகள், போல் இன்றி ஜீவா மற்றும் பாவானா மணிவண்ணன் ஆகியோர் இந்தப்படத்தில் நடித்தது உண்மையிலேயே சிறப்பான விடயம் .
புலம் பெயர் தமிழர் அப்படத்திற்கு பொருளாதார ரீதியாக எந்தவொரு வெற்றியையும் வழங்கவில்லை என்ற வருத்தம் தயாரிப்பாளர் தரப்பில் இருக்கிறது. எனவே புலம்பெயர் நண்பர்களே படத்தில் என்ன சொல்கிறார்கள் என்பதைப்பார்ப்பதற்காகவேனும் உங்கள் குடும்பத்தினருடன் திரையரங்குக்கு சென்று பாருங்கள்
நண்பர்களே !
ஈழத்தவர் குறித்து பேசும் திரைப்படத்துக்கு ஆதரவழிப்பதால் இது போன்ற பல படங்கள் உருவாகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால். இது போன்ற முயற்சிகள் தொடரும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
மொத்தத்தில் இராமோஸ்வரம் படமல்ல ... உணர்வால் கலந்து ஒன்றிணைந்த தமிழர்களின் பல உணர்வுகளை மீட்டும் ஒரு காவியம் அத்துடன் இராமேஸ்வரம் இலங்கை அகதிகள் குறித்து இதுவரை வெளிவந்த எல்லாப் படங்களையும் விட சிறந்தவொரு படைப்பு என்பதில் ஐயமில்லை
இணையங்களினூடு பெற்ற தகவல்களுடன் ஆக்கத்தை எழுதி உங்களிடமிருந்த விடைபெறுகிறேன்
என்றென்றும் நட்புடன்
மாயா
இது ராமேஸ்வரம் பற்றி கதைக்கும் ஓர் வீடியோ காட்சி
Read more...