கார்த்திகை விளக்கீடு ஞாபகங்கள்

வரும் சனிக்கிழமை வழமைபோல் கார்த்திகைத்தீபத்திருநாள் வருகிறது . எல்லார் வீட்டிலும் தீபங்கள் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற மாதிரி எல்லார் மனதிலும் அந்த ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கட்டும். அது எல்லோர் மனதையும் நிறைக்கட்டும். சமாதானமே எமக்குத்தேவை அந்தப் பெரும் உண்மையைப் புரிந்து கொள்ளும் திறனை இந்தக் கார்த்திகைத்திருநாள் நம் எல்லாருக்கும் அளிக்கட்டும் . புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அனைவருக்கும் தத்தமது பழைய கால நினைவுகள் வந்துபோகும் அந்தவகையில் எனக்கும் கார்த்திகைத்தீபத்திருநாள் நினைவுகளின் எச்சங்களை இரை மீட்டிப்பார்க்கிறேன் ( நாம் அனேகர் கழிந்த நிகழ்வுகளோடும் தான் நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றதாக இருக்கிறது ) என் பதின்ம வயதுகளில் தோழர்களோடு விளக்கீடு நாட்களின் நினைவுகளை இன்றைய நிஜங்களோடு இரைமீட்கின்றேன்.

விளக்கீடு அன்று காலையே பருத்திவேட்டியைக்கிழித்து வெட்டிய கிழுவை மரத்தடிகளில் பந்தம் கட்டுவதும் , வழைக்குற்றியொன்றை வீட்டமுகப்பில் நடுவதற்காக வெட்டிவைப்பதுமாக வீட்டில் ஓர் இனம்புரியாத உஷார் கிளம்பிவிடும் படிப்படியாக விளக்கேற்றுவதற்காக சுட்டிகள் தேங்காய்ப்பாதிகள், திரிகள் என போர்க்களத்திற்கு போவது போல் தயாராகும் . மாலை வாழைக்குற்றியை வீட்டுப்படலைக்குமுன்னால் நட்டு அதற்குரிய அலங்காரமெல்லாம் செய்து இறுதியில் பாதிவெட்டிய தேங்காயில் திரியைப்போட்டு எரித்துவிட்டால் சும்மா ஜெகஜோதியாய் எரிவதைப்பார்க்க அழகாயிருக்கும் . வீடுகள் தோறும் தீபங்கள் அசைந்தாட அந்த காட்சியே அருமை தான்:)
அனேகமாக அந்நேரத்தில் தான் கோவில்களில் சொக்கப்பனையும் எரிபடும்
அத்தோடு நாம் வாழைக்குற்றியின் பாதுகாப்பை வீட்டு மகளீரிடம் ஒப்படைத்துவிட்டு சைக்கிளையும் எடுத்துக்கொண்டு ஏரியாவைச்சுற்றிப்பார்க்கக்கிளம்பிவிடுவம் அவ்வப்போது போகிற பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படாத வழைக்குற்றிகளை நிலத்தில் சாய்ப்பதுவும் சிட்டிகளை பொறுக்கி வேறு இடத்தில் இடம்மாற்றி வைப்பதுவும் நடக்கும் .
இந்நசுவையான காலங்களெல்லாம் இனியெப்போதாவது நடக்குமா :(


"நம் மனமாகிய இருண்ட காட்டிற்கும் அது போல் ஒரு ஞான ஒளி தோன்ற வேண்டும். காட்டில் ஏற்படும் தீயானது எப்படிக் காட்டை அழித்துப் பொசுக்குகிறதோ, அது போல் நம் மனத்தில் தோன்றும் இந்த ஒளியானது நம் மனமாகிய காட்டில் உள்ள இருண்ட பாகங்க்ளில் ஒளியைத் தோற்றுவிப்பதோடு நில்லாமல், காட்டில் உள்ள வேண்டாத செடி, கொடி, மரங்களான ஆசை, பொறாமை, தீயவை நினைத்தல், தீயவை செய்தல், தீயவை பார்த்தல் போன்றவற்றையும் அழித்துப் பொசுக்க வேண்டும். கார்த்திகைத் திருநாளில் தீபவொளி பொலிந்து உலகம் உய்ய இறைவனை வணங்குகிறேன். "

என்றென்றும் அன்புடன்
மாயா

Read more...

சரஸ்வதி பூசை கொண்டாடினோம் ?

" அனைவருக்கும் வணக்கம் வணங்கத் தலையும் வழங்க மொழியும் தந்த சரஸ்லதிதேவியைப்போற்றி எனது உரையை ஆரம்பிக்கிறேன் " இது நான் பாடசாலை நவாராத்திரி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது , எனது பாட்டனார் எழுதித்தர பாடமாக்கிவிட்டு சபையை விளிக்கப் பயன்படுத்திய வரிகள் தாம். . . .

நவராத்திரி முடிந்து கனகாலமாயிடுச்சு இப்ப என்ன திடீரெண்டு சரஸ்வதி பூசையைப்பற்றி பதியிறன் எண்டு யோசிக்கிறியளே ஒன்டுமில்லை இந்தமுறை சரஸ்வதிபூஜையை கொஞ்சம் விசேடமாய் கொண்டாடுவம் எண்டு பெடியள் நாங்களே பொங்கல் அவல் சுண்டல் எல்லாம் செய்து , வாழை இலை மாவிலை காசுக்கு வாங்கி ( இந்தக்கொடுமையெல்லாம் கொழும்பில தான் ) கொண்டாடினம் அந்தநேரத்தில தான் ஊர் ஞாபகங்கள் அவரவர் மனதில் நிழலாடியது அதையொட்டிய பதிவே இது சற்று ? ? காலம் தாழ்த்தியமைக்கு மன்னியுங்கள் . . .
சரஸ்வதி பூசைக்காலமென்றால் நான் சின்னன்ல படிச்ச யாழ் இந்து ஆரம்பப்பாடசாலையில பெரிய அமளியாயிருக்கும் ஒவ்வொரு வகுப்பு வாரியாகப் பிரித்து பூசை நாள் ஒதுக்கப்பட்டு இருக்கும் அதனால அந்தந்த வகுப்பு மாணவர்கள் தங்கட தங்கட பெருமையை காட்டுறத்துக்கு பெரிய பாடு படுவார்கள் தோறணம் கட்டுறது மாலை பூ கொண்டுவந்து பூசைமாடத்தைச் சோடித்தது ஒரு கலக்கு கலக்க்குவார்கள் . பின் விஜயதசமி நாளான்று ஐந்து மணிக்கெல்லாம் நீண்டதொரு வாழை மரம் அருகாமையிலிருக்கும் கொண்டலடிப்பிள்ளையார் முன்றலில் நட்டு நிமிர்ந்திருக்கும். சுவாமி வெளி வீதி வலம் வந்து உட்புக முன் குருக்கள் ஐயா நீண்டதொரு வாள் போன்ற கத்தியை வைத்துக்கொண்டு ஓடி ஓடி ஒவ்வொரு வாழையா வெட்டி கடைசி வாழையை ஒரே போடாக வெட்டு ஒன்று துண்டு ரண்டாக வெட்டப்படும் வரை சும்மா M.G.R நேரடியாக கத்தி சுத்தினமாதிரி இருக்கும் இத்தின வருசத்தில நான் அந்தக்குருக்கள் ஐயா வெட்டுறமாதிரி ஒரிடத்திலயும் பார்க்கேல்ல . அளவெட்டியில இருக்கிற காலத்தில வேட்டைத்திருவிழா எண்டால் கும்பளாவளை பிள்ளையார் கோவிலில் நடக்கும் வாழை வெட்டுக்கு தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவிலிருந்து அம்மாளாச்சி வருவா அது பெரிய திருவிழா மாதிரி நடக்கும் .
காலமெண்டும் காத்திருப்பதில்லை தானே அப்படியே விடலைப்பருவத்துக்குள் வந்தாச்சு அதாவது ஆண்டு 11 படி்க்கிறகாலம் சரஸ்வதி பூசைக்காலத்தில் ரியூட்டறிகள் பாடும் கொண்டாட்டம் தான். ஆண்டுக்கொருமுறை தாங்கள் கொண்டாடும் ஆண்டுக் களியாட்ட விழாவாகவே "வாணி விழா" என்று பெயரிட்டு ஒரு நாள் விழாவாகக் கொண்டாடுவார்கள். எந்த விதமான களியாட்டங்களையும் விரும்பாத வேலாயுதம் ஆசானுடைய மணி கல்வி நிலையமும் இதுக்கு விதிவிலக்கில்லை . நாங்க தான் பெரியாக்கள் எண்ட நினைப்பு வேற இருக்கும் சும்மா ஏரியாவையே அதிரப்பண்ணிவிடுவோமில்ல ? . ஒவ்வொரு வாணி விழாவும் ஏற்படுத்திப் போன ஞாபகங்கள் அதிகம். சரஸ்வதி பூசைக்காலத்தில் இரா செல்வவடிவேல் சேர் ஆறாம் ஆண்டு முதல் பதினொராம் ஆண்டு மாணவர்களுக்கு விஞ்ஞானம் பாடத்தில் பரீட்சை வைத்து முதன்மைப் புள்ளி பெறும் மாணவருக்கு வாணி விழாவில் பரிசு கொடுப்பார். (அது அவர் எழுதிக விஞ்ஞான விளக்கப்புத்தகமாய்த்தானிருக்கும்) இதற்காகவே சிலர் மாய்ஞ்சு மாய்ஞ்சு படித்ததும் ஞாபகத்தில் நிற்கிறது :) அத்தோட பட்டிமன்றம் என்று ஆரம்பித்து செல்வவடிவேல் சேரை நடுவில இருத்தி தீர்ப்புச்சொல்லவேணும் என்று சொல்வதும் பட்டிமன்றம் சூடு பிடிக்கிற தறுவாயில் உணர்ச்சி வசப்பட்டு சில பொம்பிளைப்பிள்ளையள் அழுவதும் பின் சேர் இரண்டு தரப்புக்கும் சமனாக மதிப்பெண்கோடுப்பதும் மறக்கமுடியாதவை
கடைசி நிகழ்ச்சியாக இசைகச்சேரி வைத்தால் தான் விழா நிறைவாய் அமையும் எண்டு நண்பன் சதீஸ் " செம்பருத்திப்பூவே " பாடிக்கொண்டிருக்க வேலாயுதத்தார் வந்து அப்பன் இனிக்காணுமெண்டு சொல்லி வாணிவிழாவை முடித்து வைத்தது தான் எமது வேலாயுதம் மாஸ்டர் வீட்டுக் கடைசி வாணி விழா

இனி எனது க.பொ.த உயர்தரவகுப்புக் காலம் அது அனேகர் வாழ்வில் பொற்காலம் எங்கட பாடசாலை கிறீஸ்தவப்பாடசாலை என்றாலும் வாணி விழாவுக்கு குறைச்சலில்லை நாங்களே எல்லாப்பாடசாலைகளுக்கும் போய் மாணவர்களை வரச்சொல்லிக்கொண்டாடுவதும் இறுதியில் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அணியுடன் பட்டிமன்றம் வைப்பதும் சுவையான அனுபவங்கள் நாங்கள் இருக்கும் போது நடைபெற்ற பட்டிமன்றத்தில் என் சகபாடிகள் கதிர் சதீசன் வசீதரன் போன்றோர் பேசும்போது பின்னால் வேட்டியை மடிச்சுக்கட்டிக்கோண்டு விசில் அடிச்சதும் இன்னும் பசுமையாய் நிற்கிறது மாணவர்கள் வேஷ்டியும் மாணவிகள் Half Saree கட்டுவதும் இந்த நாட்களில் தான்

அதன்பின் நீண்ட காலத்தின்பின் அண்மையில் சந்தித்த நண்பர்களுடன் சேர்ந்து வாணிவிழா கொண்டாடினோம் ?ஆனாலும் முந்தையமாதிரி சுவையான அனுபவங்கள இருக்கவில்லை ஏதோஓர் வெறுமையே இருந்தது


Read more...

காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80 வருடங்கள்

மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து 80வருடங்கள் பூர்த்தியாகியது (29.11.1927 – 29.11.2007) அந்நேரத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் அவர் எமது யாழ் பரியோவான் கல்லூரிக்கும் [Jaffna St Johns College ] விஜயம் செய்திருந்தார் அதையொட்டிய நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றன

பட உதவி சின்னக்குட்டி

Read more...

தமிழ் சினிமாவின் தீவிர விசுவாசமுள்ள ரசிகர்களே போலிகளைக்கண்டு ஏமாறாத புத்திசாலிகளா நாம் ?

தீபாவளி வெளியீடுகளான புதிய தமிழ் சினிமாக்களை விழுந்தடித்து பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் தீவிர விசுவாசமுள்ள ரசிகர்களே உங்களுக்காக இந்தச்செய்தி .
ரசிகர்களே அதிகளவு மது மற்றும் சிகரட் காட்சிப்படுத்தல் , மது மற்றும் சிகரட் பாவனைக்காட்சிகள் அதிகம் காண்பிக்கப்படுவது தமிழ் சினிமாவில் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.வெள்ளித்திரையில் முன்னணி நட்சத்திரங்கள் , இயக்குனர்கள் மற்றும் திரைப்படத்துறையைச்சார்ந்தவர்கள் மது மற்றும் சிகரட் கம்பனிகளின் பணத்திற்காக அவர்களின் விற்பனைத்தந்திரங்களுக்காக துணைபோவதை அறிவீர்களா ? நன்கு அவதானித்தால் மது மற்றும் சிகரட் பாவனை செய்யும் காட்சிகள் வலிந்து சேர்த்திருப்பது தெரியும் . பிரபலங்களினூடாக தமது பொருட்களை விளம்பரப்படுத்தும் கம்பன்களின் தந்திரங்களை அறியாது நாமும் நமது எதிர்காலமும் அவர்களை பின்பற்றி மது அருந்த சிகரட் புகைக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்பு
அவர்களது இலக்கு மொத்தத்தில் நாமும் நமது எதிர்காலமும் தானே
உங்கள் அபிமான நடிகர்களின் புதிய தமிழ் சினிமாக்களை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் தீவிர விசுவாசமுள்ள ரசிகர்களே அதில் காண்பிக்கப்படும் மது மற்றும் சிகரட் சம்பந்தமான காட்சிகளை அவற்றிலிருக்கும் வியாபாரதந்திரங்களை புரிந்து கொள்ளுங்கள் இதுபற்றி நண்பர்களுடன் கலங்துரையாடுங்கள்

* நீங்கள் திரைப்படங்களில் காணும் சாராய சிகரட் முகங்களும் நிஜத்தில் காணும் முகங்களும் ஒன்றா ?
* எதற்காக உண்மையில் கஷ்டமாக அவஸ்த்தையாக உணரப்படும் சாராய சிகரட் பாவனை திரைப்படங்கள் சுவாரசியமானதாகக் காட்டப்படுகிறது?

இதுபற்றி சிந்தித்துப்பாருங்கள் கலந்துரையாடுங்கள்
இங்கே உங்கள் அபிமான நடிகர்களின் புதிய தமிழ் சினிமாக்களை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் தீவிர விசுவாசமுள்ள ரசிகர்களைக்குறைசொல்லவில்லை அதிலுள்ள சாராய சிகரட் முகங்களை விளங்கிக்கொள்ளுங்கள் என்பதே எனது எதிர்பார்ப்பு .
இது சமுதாய விழிப்புணாவுள்ள இளம்சந்ததியினரால் தீபாவளியன்று கொழும்பிலுள்ள பிரபல திரையரங்குகள் மற்றும் கோயில்களில் துண்டுப்பிரசுரமாக விநியோகிக்கப்பட்டது

Read more...

அழகிய தமிழ் மகன் [ ஆடியன்ஸ்ஐ வைத்து காமடி ஒன்னும் பண்ணல தானே ]

தேர்வுகள் முடிந்தபடியால் பிறகு நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து நிம்மதியாகத் தீபாவளி கொண்டாடினோம் . இந்த வருடமும் வழமைபோல் தான் தீபாவளி நாள் தொடங்கியது . ஆனால் நாளின் முடிவு தான் சரியில்லை தீபாவளி வெளியீடான நம்ம டாக்டர் விஜயோட [ ஆளாளுக்கு டாக்டர் பட்டம் குடுத்து, அதுக்கு இருந்த மரியாதையே போச்சு. ] அழகிய தமிழ் மகன் பாக்கப்போனதால தான். [ வேல் Or பொல்லாதவன் போவோம் என்று நண்பர் கூட்டத்தில் ஒரு சாரார் விரம்பினாலும் " ஒருதரம் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன் " என்று பழைய விஜயோட Dialogஐ விட்டுவிட்டு நேரா திரையரங்குக்கு போனபோது கூடத்தெரயவில்லை நமக்கு நாமே ஆப்பு வைக்கிறோமென்று ] . முன்னொரு காலத்தில யாழ்ப்பாணத்தில படத்துக்கு போறெண்டா ஒரு இருபது பேர் மட்டில போவம் இப்ப கொழும்பில தேறி நிக்கிறது 10 பேர்தான். என்ன செய்யிறது எல்லாரும் வெளிநாடு வெளிநாடென்டு பறக்கிறாங்க . இன்னும் கொஞ்ச நாளில என்னோட படிச்சவையை தேடிக்கண்டுபிடிக்கிறெண்டா குதிரைக்கொம்பாத்தான் இருக்கும்.

தியட்டரில கூட்டத்துக்கு குறைவில்லை. பெரிய கியூ. ஒரு 1500 பேர் நிண்டமாதிரித்தான் இருக்கு. ரிக்கட் நேற்று 300/= . உள்ள போனா சனமெண்டா அப்படி ஒரு சனம். படம் தொடங்கிற நேரத்தில இருந்நு கொஞச நேரத்துக்கு ஒண்டுமே விளங்கேல்ல. அவ்வளவு விசிலடியும் சத்தமும். பிறகு பிறகு குறைந்து விட்டுது ஏனென்டா அவனவன் எப்ப படம்முடியுமெண்டு நேரத்தைப்பார்க்க வெளிக்கிட்டுட்டான் பின்னுக்கு இரண்டாவுது விஜய் வந்தாப்பிறகு படம் நல்லாப்போகும் மாதிரி மாதிரியிருந்துது ஆனால் சுத்த . . . . .

எனக்கு படத்துக்கு விமர்சனம் சொல்லுற அளவுக்கு ஒண்டும் தெரியாது அனாலும் திரு கோவி கண்ணன் உதவியோட கொஞ்சம் கதைக்கிறன் வழக்கமான படங்களில் வருவது போல் கன வில்லன்கள் Comedyக்கு ஒருவர் என்ற கதைகளில் இருந்து விலகி இரட்டை வேடத்தில் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். படத்தில் அவர் தவிர்த்து மற்றவர்களுக்கு திரையில் தோன்றும் வாய்பு குறைவு. கதைக்கு உரு கொடுப்பதற்காக விஜய்க்கு ESP என்று சொல்லக்கூடிய வித்தியாசமான மனவியல் சக்தி இருப்பதாகவும் [ மணிவண்ணன் இயக்கிய நூறாவது நாள் படத்தில் கதாநாயகி நளினிக்குவரும் சக்தி தான் ] உறவினர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறிந்து கொள்வதாக காட்டுகிறார்கள்.

நான் பார்த்ததில் அனேகமான காட்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது கொஞ்சம் சொல்லட்டா ? இந்த படத்தில் குருவாக மாறி வரும் பிரசாத்[விஜய்] தான் தான் குரு என்பதை நம்ப வைக்க செய்யும் முயற்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது. கூட இருக்கும் குருவின் நண்பர்களும் ஒரிஜினல் குருவை நம்ப மறுக்கிறார்கள். காதலிக்கும் ஸ்ரேயாவுக்கும் யார் ஒரிஜினல் என்ற குழப்பம் இருக்கிறதாம். இரட்டை பிறவிகளாகவே இருந்தாலும் ஒருவருக்கு தெரிந்த எல்லாமும் மற்றவருக்கு தெரியாது. ஆனா இங்க ?

இரட்டையரில் கெட்டவனான விஜய்யைக்கூட கடைசியில் திருந்துவதாகக் காட்டியிருக்கிறார்கள், கெட்டவனாக இருப்பவன் வாழ்க்கையில் நல்லவனாக ஆவதை எதிர்ப்பவனல்ல நான் என்றாலும் எனக்கென்னமோ இந்தப்படத்தை அவன் கெட்டவனாகவே கடைசியில் இருப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை(!) இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே! பாராட்டலாம்

* சண்டை காட்சிகள் வழக்கமான ஆக்ரோசமான விஜய் ஸ்டைல். சண்டை பயிற்சி பெப்சி விஜயன் சும்மாவா
* இயக்குனர் பரதன்
* படத்துக்கு இசை ஏஆர்ரகுமான் . ஏமாத்திப்போட்டார் போலதான் கிடக்கு

அதிலொரு காட்சி ரெம்பக்கொடுமையாயிருந்தது பெண் குழந்தை ஒன்று மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைவதும் அதை படுக்கையில் கிடத்தி பிண அலங்காரம் செய்து வைத்திருப்பதும் தான் குழந்தைகளின் மரணத்தை திரையில் பார்பது கூட சோகம் தான்.

நன்றி திரு கோவி கண்ணன்

Read more...

இலங்கை மலையக மக்களின் [ இளைஞர்களின் ] இன்றைய நிலை


முலம் :- வீரகேசரி
நன்றி

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP