தமிழக தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே!

முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.

பாசத்திற்குரியவர்களே!

நீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்துவிட்டீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகக் கூடி - ஒருமித்த குரலில் - பலம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் - தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.

முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமன்றி, காத்திரமான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப-கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

கட்சிகளின் வரம்புகளைத் துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களைக் கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் "இனத்தின் உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்" என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். "தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது" என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தைப் பூசி விட்டீர்கள்.

மாண்புமிகு முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக - தமிழினத்தின் நிபந்தனையற்ற காவலனாக - அவரது உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சிக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டீர்கள். தமிழர்களுக்கு எதிரான போரை நிறுதவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய்க் குடியமரவும் - உருப்படியான காரியங்களைச் செய்யுமாறும், சிறிலங்கா அரசுக்கான அனைத்து இராணுவம்- சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியைக் கொடுத்திருக்கின்றீர்கள்.

தமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும் -

- தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியைக் காட்டியிருக்கின்றது!

- "தமிழகம் எமக்காகப் பொங்கி எழாதா?.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா?.." என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.

- "தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை!" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு சினத்தையும் அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது.

- எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை - தமது சொந்த நலன்களுக்காக - கைகட்டிப் பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அதிர்ச்சியளித்திருக்கின்றது.

வரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம். நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கின்றான் தமிழன்.

எமது அன்பான தமிழகத்து உறவுகளே!

தமிழீழ மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் எல்லையற்ற பாசத்தையும், அக்கறையையும், அவர்களுக்காக நீங்கள் சந்தித்த இடர்களையும் நாம் அறிவோம். ஆட்சியை இழக்கும் சூழல் வந்த போது, சொந்தக் குழந்தைகளுக்காகத் துன்பங்களைத் தாங்கும் ஒரு தந்தையாக அதைப் பொறுத்துக்கொண்ட கலைஞர் ஐயாவையும், சிறையில் வாடும் துயரம் நிகழ்ந்த போது, சொந்தச் சகோதரர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட தலைவர்களையும், இன்னும் எத்தனையோ வழிகளில் எமது சுமைகளைச் சுமந்த அனைவரையும் நாம் என்றும் மறவோம். எங்கள் நெஞ்சங்களின் மிகச்சிறந்த இடமொன்றில், நன்றியுணர்வுடன் உங்களை நாம் அமர்த்தியிருக்கின்றோம்.

தமிழினத்தினது வரலாற்றின் மிகவும் உச்சமான ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இன்று இருக்கின்றோம். சரியான திசையில் தன்னை நகர்த்திச் செல்வதற்காக - காலத்திற்குக் காலம் - ஒப்பற்ற மனிதர்களை வரலாறு பிறப்பிக்கின்றது. அவர்களைத் தான் நாம் வரலாற்று மனிதர்கள் என்கின்றோம். அத்தகைய ஒரு மகோன்னதப் பிறப்பை கலைஞர் ஐயா அவர்களுக்குக் கொடுத்த சரித்திரம், இப்போது அவரை மிகச்சரியான இடத்தில் அமர்த்தியிருக்கின்றது.

தென்னாசியாவையே அசைக்கும் வல்லமையை அவருக்குக் கொடுத்திருக்கின்றது. அவரது அறிவு ஞானமும், அரசியற் செல்வாக்கும் தமிழர்களுக்கென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்கி, தமிழீழத்தில் துன்பத்தில் உழலும் எம் உறவுகளுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தவை. தமிழீழ மக்களின் சுதந்தரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, அவருக்குப் பலம் சேர்த்து,

அவரை உற்சாகப்படுத்தி, தமிழினத்தைத் தாங்கும் தூண்களக நீங்கள் எல்லோரும் விளங்க வேண்டும் என்று நாம் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலும், தமிழினத்தின் நிரந்தரக் காவலனாக கலைஞர் ஐயா என்றும் இருக்கின்றார் என்பதை, தமிழினத்தின் பகைவர்களுக்கும், இந்த உலகிற்கு அவர் உணர்த்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

அன்பானவர்களே!

இப்போது - தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நிம்மதியைக் கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறி, சுதந்திரமக வாழ ஆவன செய்ய வேண்டும்.

"சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாதெனின், தமிழர்கள் பிரிந்து போவதே சரி" என்பதே கலைஞர் ஐயா அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடும், தமிழகத் தலைவர்களாகிய உங்களில் பலரது வெளிப்படையான நிலைப்பாடுமாகும். உங்களது அந்த நிலைப்பாட்டுக்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்களின் துன்பங்களுக்கு "தமிழீழத் தனியரசு" தான் சரியான ஒரே தீர்வு என்ற ஒரு தீர்மானத்தை தமிழக மக்களவையிலே நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவில் இருக்கும் தடையை நீக்கி, ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வழி பிறக்கச் செய்ய வேண்டுமென்றும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.

நீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஒர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம்: தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் நான் அறிவோம்.

ஒரே இரவில் அதிசயங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்: நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.

நன்றி கலந்த மரியாதையுடன்,
இலங்கை தமிழ் சங்கம் - ஐக்கிய அமெரிக்கா
மின்னஞ்சல் : president@sangam.org

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம் இணையம்

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP