விவேகானந்தர்-25 [ஆனந்தவிகடன் தொகுப்பு]

மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி!

  • நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் 'பயில்வான் சாமி'. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு 'விவேகானந்தர்' என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது!
  • கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் சொன்னார். 'என்னோடு இருந்துவிடேன்' என்று ராமகிருஷ்ணர்அழைத்தார். குருநாதர் ஆசைதான்கடைசியில் நிறைவேறியது!
  • 'புத்தகத்தில் இருக்கிறது, பிறர் சொன்னார்கள் என்பதற்காக எந்தத் தத்துவத்தையும் ஏற்காதீர்கள். நீங்களே பகுத்தறிந்து சோதனை செய்து பார்த்து எதையும் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொன்ன ஒரே சாமியார் இவர்தான்!
  • விவேகானந்தருக்கு ஞானத் தாயாக இருந்தவர் அம்மா புவனேஸ்வரி. 'எனக்கு ஞானம் ஏதாவது இருக்குமாயின் அதற்காக என் அம்மாவுக்குத்தான் நான் நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன்' என்று சொல்லியிருக் கிறார்!
  • சிலம்பு, மல்யுத்தம், நீச்சல், படகு ஓட்டுதல் போன்ற பயிற்சிகளை இளம் வயதிலேயே எடுத்துக்கொண் டவர். 'உடலைப் பலமாகவைத்துக் கொண்டால்தான் உள்ளம் பலமாகும்' என்பது அவரது போதனை!
  • 'கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?' -யாரைப் பார்த்தாலும் நரேந்திரன் கேட்கும் ஒரே கேள்வி இதுதான். 'பார்த்திருக்கிறேன்... உனக்கும் காட்டுகிறேன்' என்றுசொன்னவர் ராமகிருஷ்ணர் மட்டுமே!
  • புத்தர் ஞானம்பெற்ற போதி மரத்தின் அடியில் தியானம் செய்ய ஆசைப்பட்டுத் தனது நண்பர்களுடன் சென்றார். புத்தகயாவில் தியானம் செய்துவிட்டுத் திரும்பினார்!
  • விவேகானந்தர் நிறைய பாடல்கள், கவிதைகள் எழுதியிருக்கிறார். நினைத்த மாத்திரத்தில் அதை அப்படியே சொல்லும் ஆற்றலும் அவ ருக்கு இருந்திருக்கிறது!
  • விவிதிசானந்தர், சச்சிதானந்தர் ஆகிய இரண்டு பெயர்கள் மூலமாகத் தான் அவர் இந்திய நகரங்களுக்கு அறிமுகமானார். அமெரிக்கா செல்ல ஏற்பாடானபோது, கேக்திரி மன்னர் தான் 'விவேகானந்தர்' என்ற பெய ரைச் சூட்டினார்!
  • ராமகிருஷ்ணர் மறைவுக்குப் பிறகு தட்சிணேஸ்வரத்துக்கும் கொல் கத்தாவுக்கும் இடையே வர நகரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினார். சில நாட்களில் அதைக் காலி செய்துவிட்டார். 'நிரந்தரமாகத் தங்கினால் அந்த இடத்தின் மீது பற்று வந்துவிடும்.மூன்று நாட்களுக்கு மேல் எங்கும் தங்கக் கூடாது' என்ற திட்டம்வைத்து இருந்தார்!
  • கொஞ்சம் அரிசி, சிறிது கீரை, ஒரு துளி உப்பு இவைதான் உணவு. மன்னர்களின் அரண்மனைகளில் தங்கினாலும் ஆடம்பர உணவைத் தவிர்த்தார்!
  • ஐந்து ஆண்டு காலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். கையில் காசு இல்லாமல் புறப்பட்டார். யார் பணம் கொடுத்தும் வாங்கவில்லை. மைசூர் மகாராஜா மொத்தச் செலவையும் ஏற்கிறேன் என்றபோது 'திருச்சூருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் போதும்' என்று மறுத்துவிட்டார்!
  • தாஜ்மஹால் அவரது மனம் கவர்ந்த இடம். அதை முழுமையாக அறிந்து ரசிப்பதற்கு ஆறு மாதங்கள் வேண்டும் என்று சொன்னார்!
  • 'எழுமின்... விழுமின்... குறிக் கோளை அடையக் குன்றாமல் உழைமின்' என்ற வார்த்தையை முதன்முதலாகச் சொன்ன இடம் கும்பகோணம்!
  • வெற்றிலை, புகையிலை போடுவார். 'ராமகிருஷ்ணருக்கு ஆட்படுமுன் உல்லாசமாக இருந்தவன். அதன்பின்னும் பழைய பழக்கங்களை என் னால் விட முடியவில்லை. பெரும் லௌகீக இச்சைகளை எல்லாம் துறந்த பின் இந்த சிறிய விஷயங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என்பதால், இவற்றைக் கைவிட முயற்சிக்கவில்லை' என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்!
  • புத்தகங்களை அவர் அளவுக்கு வேகமாக யாராலும் வாசிக்க முடியாது. 'வரிவரியாக நான் படிப்பது இல்லை, வாக்கியம் வாக்கியமாக, பாரா பாராவாகத்தான் படிப்பேன்' என்பார்!
  • அமெரிக்கா செல்லும் முன் கன்னியாகுமரி வந்தவர், கரையில் நின்று பார்த்தபோது தெரிந்த பாறைக்கு நீந்தியே போய் தியானம் செய்தார். அதுதான் விவேகானந்தர் பாறை. அமெரிக்காவில் இருந்து வரும்போது சென்னையில் தங்கிய இடம், கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம்!
  • தமிழ்நாட்டுக்கு மூன்று முறை வந்திருக்கிறார் விவேகானந்தர். முதலில் மூன்று மாதங்கள். அடுத்து 20 நாட்கள் தங்கினார். மூன்றாவது முறை வரும்போது அவரை கப்பலைவிட்டு இறங்கவிடவில்லை. கொல் கத்தாவில் பிளேக் நோய் பரவிய காலம் என்பதால், இவரைக் கப்பலை விட்டு இறங்க அனுமதிக்கவில்லை!
  • 'நீங்கள் ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுகிறீர்கள். அப்படிப் பேசினால் யாராவது விஷம்வைத்துக் கொன்றுவிடுவார்கள்' என்று மைசூர் மகாராஜா சொன்னபோது, 'நீங்கள் தவறாக நினைப்பீர்கள் என்பதற்காக சத்தியமற்ற வார்த்தைகளை என்னால் எப்படிப் பேச முடியும்?' என்று திருப்பிக் கேட்டார்!
  • 'பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் சென்ற பின்னால் சீனாவால் நம் நாட்டுக்குப் பேராபத்து நிகழும்' என்று 100 ஆண்டுகளுக்கு முன்னால் தீர்க்கதரிசனத்துடன் சொன்னது அவர்தான்!
  • அடிமைப்படுத்தி வந்த ஆங்கில அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். 'ஆங்கில அரசாங்கம் என்னைக் கைது செய்து சுட்டுக் கொல்லட்டும்' என்று வெளிப்படையாகக் கோரிக்கைவைத்தார்!
  • விவேகானந்தருக்கும் சென்னைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. 'சென்னை இளைஞர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன், ஆன்மிக அலை சென்னையில் இருந்துதான் அடிக்க வேண்டும்' என்ற அவரது பேச்சில் சென்னைப் பாசம் அதிகமாக இருக்கும்!
  • கலிஃபோர்னியாவில் இவர் நடந்து போனபோது துப்பாக்கி பயிற்சி நடந்துகொண்டு இருந்தது. சுட்டவருக்கு குறி தவறியது. பார்த்துக்கொண்டு இருந்த இவர் வாங்கி... ஆறு முட்டைகளையும் சரியாகச் சுட்டார். 'துப்பாக்கியை இன்றுதான் முதல்தடவையாகப் பிடிக்கிறேன். இதற்குப் பயிற்சி தேவையில்லை. மன ஒருமைப்பாடுதான் வேண்டும்' என்று சொல்லிவிட்டு வந்தார்!
  • 'ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ,சமயத் திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது' என்று இவர் சொன்ன வார்த்தைகள் சீர்திருத்தவாதிகளையும் திரும்பிப் பார்க்கவைத்தது!
  • விவேகானந்தரின் சாராம்சம் இதுதான்... 'முதலில் உங்களிடமே நம்பிக்கைகொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்'!
31-03-2010 ஆனந்தவிகடன் இதழில் வெளியான விவேகானந்தர் தொடர்பாக ஆக்கம்.

நன்றி: ஆனந்தவிகடன்

இறுதியாக விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு!




3 பின்னூட்டம்(கள்):

Jawahar  

விகடனில் படிக்காத என் மாதிரி ஆசாமிகளுக்கு மிகச்சிறந்த இடுகை. விவேகானந்தரைப் படித்தவன் வேறு யாரையுமே குருவாக ஏற்றுக்கொள்ள மாட்டான். அந்த மானசீக குருவே போதும்.

http://kgjawarlal.wordpress.com

மாயா  

நன்றி ! உங்கள் பின்னூட்டத்திற்க்கு!
// விவேகானந்தரைப் படித்தவன் வேறு யாரையுமே குருவாக ஏற்றுக்கொள்ள மாட்டான். // நிச்சயமாக இக்கருத்தை நான் ஆமோதிக்கிறேன்:)

Unknown  

நான் இன்னும் அந்த விகடன் படிக்க வில்லை


எனிலும் நன்றிகள் எது போன்ற உண்மையான ஆன்மீக வாதிகளின் கருத்துகளை பகிர்தத்ட்ட்கு

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP