ஏ கடலே! நாம் மனிதர்கள் உன்னை எதிர்கோள்வோம்


ஏ கடலே!

உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகின்றோம்

ஏ கடலே
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா
முதுமக்கள் தாழியா?

நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?

துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?

உன் மீன்களை நாங்கள் கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?

நீ அனுப்பியது
சுனாமி அல்லபிரளயத்தின் பினாமி

பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி

குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்

போதாதென்றுஉன் டினோசார் அலைகளை அனுப்பி
எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

என்னபிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?

சுமத்ராவை வென்றான்சோழமன்னன் ராஜராஜன்
அந்தப் பழிதீர்க்கவாசுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?

காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்

பிணங்களை அடையாளம்
காட்டப்பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய் வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

நாம் மனிதர்கள்
எதிர்கோள்வோம்

மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்

ஆக்கம்
கவிப்பேரரசு வைரமுத்து

0 பின்னூட்டம்(கள்):

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP